Advertisment

“எங்க ஏரியாவிலேயே இந்த பாட்டை போட்டு ஆடுவீங்களா” - ஆம்புலன்ஸை நிறுத்தி தலித் மக்கள் மீது பயங்கர தாக்குதல்! 

Cuddalore Buvanagiri Dalit people issue

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி தலித் பகுதியில் உள்ள சாமி சிலையை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் டிராக்டரில்மேளதாளம் இசைக்க, ஸ்பீக்கரில் பாட்டு போட்டுக் கொண்டு ஊர்வலமாக மாசி மக திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு கிள்ளை கடற்கரைக்கு எடுத்துச் சென்று அங்கு வழிபாடு செய்து திங்கள் கிழமை இரவு மீண்டும் ஊருக்குத்திரும்பி உள்ளனர்.

Advertisment

அப்போது அவர்கள் வரும் வழியில் மேலமணக்குடி என்ற இடத்திற்கு வரும்போது கர்ணன் பட பாடலான கண்டா வரச் சொல்லுங்க பாடல் ஸ்பீக்கரில் ஒலித்துள்ளது. அந்நேரத்தில் சாலையில் நின்றுகொண்டிருந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தலித் சமூக இளைஞர்களிடம், ‘எங்க ஏரியாவிலேயே இந்த பாட்டை போட்டு ஆடுவதற்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம்’ எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தலித் இளைஞர்களை சாதிரீதியாக இழிவுபடுத்தி அநாகரிகமாக திட்டியதால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த வடக்கு திட்டை,தெற்கு திட்டை, மேலமணக்குடி, மணவெளி உள்ளிட்ட பகுதியில் உள்ள மாற்றுச்சமூக இளைஞர்கள் ஒன்று கூடி தலித் சமூக இளைஞர்களை கடுமையாகத்தாக்கியுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான தலித் இளைஞர்களுக்கு தலை உள்ளிட்ட பல இடங்களில் ரத்தம் வந்ததைப் பார்த்து பயந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் இருசக்கர வாகனத்திலேயே புவனகிரி அரசு மருத்துவமனை வாசலில் அழைத்து வந்து விட்டுவிட்டு சென்றுள்ளனர்.இதனால் ஆத்திரம் அடைந்த சாத்தப்பாடி தலித் பகுதி மக்கள் சம்பவத்தில் தொடர்புடைய மாற்று சமூகத்தைச் சேர்ந்த 4 பேரை பிடித்து காவல்துறையில் ஒப்படைப்பதற்காக அதே பகுதியில் உள்ள கோவிலில் வைத்திருந்துள்ளனர்.

Cuddalore Buvanagiri Dalit people issue

இதனையறிந்த மாற்றுச் சமூக இளைஞர்கள், சம்பவத்தில் படுகாயம் அடைந்த சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் சுகுமார் என்பவரின் மகன் சுரேந்தர் (16) அவசர ஊர்தி மூலம் மேல் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது அவசர ஊர்தியை தடுத்து நிறுத்தி சுரேந்தர் அவரது தந்தை சுதாகர், அம்மா செல்வமணி ஆகியோரை இறங்க கூறியுள்ளனர். அவர்கள் மறுத்ததால் அவசர ஊர்தியின் உள்ளே ஏறி அதில் இருந்தவர்களை சாதிப் பெயரைக் கூறி கடுமையாகத்தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து சிதம்பரம் – குறிஞ்சிபாடி சாலையில் தலித் மக்கள் இரவு நேரத்தில் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி. ரகுபதி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

இதில் தாக்குதலுக்கு உள்ளான தலித் இளைஞர்கள் ரகுநாத், நித்திஷ், அன்பு செழியன், நவீன், சாரங்கபாணி மற்றும் அவசர ஊர்தியில் தாக்குதலுக்கு உள்ளான சுரேந்தர் அவரது தந்தை சுகுமார் அவரது அம்மா செல்வமணி மற்றும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த காயம் அடைந்த அஜித் உள்ளிட்டவர்கள் சிதம்பரம் ராஜாமுத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புவனகிரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் வாஞ்சிநாதன், மாவட்டத் தலைவர் ராஜேஸ் கண்ணன் உள்ளிட்டவர்கள் சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறி சம்பவம் பற்றி கேட்டறிந்தனர்.

Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe