/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_322.jpg)
கடலூர் மாவட்டம், புவனகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ‘சங்கமம்’ என்ற பெயரில் நடந்தது. கடந்த 1983 - 1984ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதள குழு மூலம் ஒன்றிணைந்தனர். பின்னர் அதில் தங்களது பழங்கால நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். அப்போது மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி ஜன 10ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதையொட்டி முதலில் விழா நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே பள்ளியை சுத்தம் செய்து புனரமைத்தனர். பிரதான பள்ளி கட்டடத்திற்குப் பெயின்ட் அடித்து அழகுபடுத்தினர். பள்ளியில் தங்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்களை அவர்களின் வீட்டிற்கே சென்று, பட்டு வேட்டி சட்டையுடன் அழைப்பிதழ் கொடுத்து அழைத்தனர்.பின் பள்ளி வளாகத்தில் காலை வழிபாட்டுக் கூட்டம் நடக்கும் இடத்தில் இன்று (11/01/2021)நிகழ்ச்சியைத் தொடங்கினர்.
இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்று பள்ளி தொடங்குவதுபோலவே நிகழ்ச்சியைத் தொடங்கினர். அப்போது ஆசிரியர்கள் மலரும் நினைவுகளைப் பகிர்ந்தனர். பின்னர் பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் மாணவர் பி.ஜி.கே.முத்து, நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் முகமது கான், வெங்கடேசன், அப்துல் கனி, வேல்முருகன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டு வேட்டி சட்டையுடன் விழாவிற்கு வந்திருந்த ஆசிரியர்களை மாணவர்கள் ஒன்று சேர்ந்து மேடையில் அமர வைத்தனர். பின்னர் அவர்களுக்கு சால்வை அணிவித்தும், சந்தன மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். பின்னர் நினைவுப் பரிசும் வழங்கி ஆசி பெற்றனர்.
ஆசிரியர்களை வரவேற்கும் விதமாக நிகழ்ச்சி நடந்த இடத்தில் சிறிய செயற்கை செடிகள் உருவாக்கப்பட்டு, அதில் ஆசிரியர்களின் வண்ண புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து ஆசிரியர்கள் மாணவர்களை வாழ்த்திபேசினர். பின்னர் மாணவர், ஆசிரியர்கள் கலந்துரையாடினர். அப்போது மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் மலரும் நினைவுகள் குறித்து பேசி மகிழ்ந்தனர்.
இதைத் தொடர்ந்து, தங்களுடன் படித்து பல்வேறு காரணங்களால் உயிரிழந்த முன்னாள் மாணவர்களை நினைவுகூறும் வகையில், முன்னாள் மாணவர்களின் உருவப்படங்களை ஆசிரியர்கள் திறந்து வைத்தனர். இதையடுத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இறந்த மாணவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது உயிரிழந்த தங்களது சக மாணவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் பள்ளிக் கல்விக்கான செலவு முழுவதையும் ஏற்பதாக முன்னாள் மாணவர்கள் அறிவித்தனர். இதையடுத்து மாணவர்களின் பழங்கால புகைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத மாணவர்களின் கருத்துக்கள் போன்றவற்றை குறும்படமாக தயாரித்து, அதை திரையில் வெளியிட்டனர். அனைவரும் இதைப் பார்த்து ரசித்தனர்.
தமிழகத்தில் காவல்துறை, கல்வித்துறை, தலைமைச் செயலகம் போன்ற பல்வேறு துறைகளில் இந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல மாணவர்கள் சுயமாக தொழில் செய்து தொழிலதிபர்களாகவும் வளர்ந்துள்ளனர். இது தவிர முன்னாள் மாணவர்கள் சிலர் அந்தமான், டெல்லி, ஐதராபாத் போன்ற பகுதிகளில் இருந்தும் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த முன்னாள் மாணவரான வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிலவழகன் என்பவருக்கு அன்று பிறந்தநாள். இதையொட்டி அங்கேயே அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகூறி அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_81.jpg)
சில மாணவர்கள் சவுதி, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் வேலை செய்து வருகின்றனர். விழாவில் பங்கேற்க இயலாத வெளிநாட்டு மாணவர்கள் தங்களுடைய வாழ்த்துச் செய்திகளையும் இந்த விழாவிற்காக அனுப்பியிருந்தனர்.இதைத் தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். பின்னர் அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
இதையடுத்து ஆசிரியர்கள் விடைபெற்ற பிறகு, மாணவர்கள் ஒருவருக்கொருவர் தங்களது மலரும் நினைவுகள் குறித்து மகிழ்ச்சியாக பேசி மகிழ்ந்தனர். பணியிலிருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், தற்போது முன்னாள் மாணவர்கள் சங்கமித்துள்ள இந்த நிகழ்ச்சி பெருமையாக இருந்ததாகவும், வழக்கமாக மாணவர்கள் மட்டுமே ஒன்று கூடும் நிகழ்ச்சியில் ஆசிரியரான தங்களையும் வரவழைத்து பெருமை சேர்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக ஓய்வுபெற்ற ஆசிரியர் துரைராஜ் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னாள் மாணவர் சிவக்குமார் கூறுகையில், “ஒரே பள்ளியில் படித்து, இன்று பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வரும் நிலையிலும் மாணவர்கள் ஒன்றிணைந்து சந்திக்க வேண்டும் என்ற முயற்சி வெற்றி பெற்றதாகவும், இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கு சில பணிகளை செய்துள்ளதாகவும், மேலும் பள்ளியின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்களாகிய நாங்க பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம். தற்போது படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கற்க தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்க தொடர்ந்து செயல்படுவோம்” என்றார்.
அரசுப் பள்ளி மாணவர்கள் 36 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கு மீண்டும் வந்து பள்ளியின் ஆசிரியர்களைக் கௌரவித்த நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதே போல் தமிழகத்தில் மற்ற அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களும் மீண்டும் பள்ளிக்கு வந்து இதுபோன்ற சந்திப்புகளை நடத்தினால், அரசுப் பள்ளியின் தரமும் நன்மதிப்பும் உயரும் என நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கூறினார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)