/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art hand cop_22.jpg)
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ம.புடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி நல்லம்மாள் (வயது 50). நேற்று இவரது கணவர் ஊராட்சியில் நடைபெற்ற 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். கணவருக்கு சமையல் செய்து கொண்டு நல்லம்மாள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மதிய நேரம் அதே தெருவை சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் கார்த்திகேயன் (வயது 23) என்பவர் நல்லம்மாள் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் நல்லம்மாளிடம் எனக்கு திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்து மூன்று நாட்கள் ஆகிறது. என்னுடைய வருங்கால மனைவிக்கு தாலிச்சரடு செய்யப் போகிறோம். எனவே நீங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தாலிச்சரடு மாடலை பார்க்க வேண்டும். அதேபோல் மனைவிக்கு செய்ய வேண்டும். எனவே உங்கள் சரடை எடுத்துக் காட்டுங்கள் என்று கூறியுள்ளார். வருங்கால மனைவிக்கு தாலிச்சரடு செய்ய மாடலாக கேட்கிறானே பையன் என்ற நல்ல எண்ணத்தோடு நல்லம்மாள் தன் கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சரடை கழுத்தில் இருந்து காட்டாமல் அப்படியே வெளியே எடுத்துக் காட்டியுள்ளார்.
திடீரென்று கார்த்திகேயன் தான் வைத்திருந்த பிளேடால் நல்லம்மாள் கழுத்தில் கிழித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத நல்லம்மாள் தாலிச்சரடை கெட்டியாகப் பிடித்து கொண்டு கார்த்திகேயனிடம் போராடி உள்ளார். இதனால் கோபம் அடைந்த கார்த்திகேயன் பிளேடால் நல்லம்மாள் உடலில் பல இடங்களில் கிழித்துள்ளார். இதனால் நிலை தடுமாறிய நல்லம்மாளை கீழே தள்ளிவிட்டு அவரது தாலிச்சரடை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார் கார்த்திகேயன். நல்லம்மாளின்கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். உடல் முழுவதும் ரத்த வழிய கிடந்த நல்லம்மாளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும்நல்லம்மாளை சந்தித்து போலீசார்சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார்த்திகேயனை தேடினர். ம.புடையூர் கிராமத்தில் அரசு பள்ளி அருகே உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த கார்த்திகேயனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். ஒரே தெருவில் வசிக்கும் இளைஞர் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கழுத்தை அறுத்து தாலிச்சரடை பறித்து சென்ற சம்பவம் ம.புடையூர் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)