சென்னையில் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி நடைபெறும் என சிஎஸ்கே அண்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மோதும் போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால், தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பல்வேறு அரசியல் அமைப்பினரும், இளைஞர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் அது போராட்டத்தைத் திசைதிருப்பி விடும் என்ற கருத்து பலரால் முன்வைக்கப்பட்டது. எனவே, ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெறக் கூடாது என அரசியல் அமைப்பினர் வலியுறுத்திய நிலையில், மீறி அப்படி நடத்தப்பட்டால் மைதானத்திற்குள் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், போராட்டங்கள் காரணமாக ஆட்டம் தடைபடலாம் என்பதால், சென்னையில் நடக்கவிருக்கும் போட்டிகள், திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. இதை மறுத்துள்ள சிஎஸ்கே அணியின் மூத்த செயலதிகாரி, திட்டமிட்டபடி சென்னையில் வருகிற 10ஆம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும், இன்று சென்னை வந்துள்ள அணி சிஎஸ்கே அணி வீரர்கள் தங்கும் விடுதிக்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.