Skip to main content

நொறுங்கி கிடந்த பிஸ்கட்; சிறுவனை மண்டியிட்டு சாப்பிட வைத்த கொடூரம்; அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்!

 

Crumbled Biscuits; The cruelty of making the boy kneel down to eat; Government school teacher dismissal!

 

ராசிபுரம் அருகே, மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனை தரையில் நொறுங்கிக் கிடந்த பிஸ்கட்டை மண்டியிட்டு சாப்பிடும்படி தண்டனை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அரசுப்பள்ளியில் மணிகண்டன் என்பவர் தமிழ்ப்பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, தொட்டியப்பட்டி அரசுத் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆகிய இருவரும் ஒரே நாளில் விடுப்பில் சென்றிருந்தனர். இதையடுத்து, மாற்றுப்பணியாக மணிகண்டனை தொட்டியப்பட்டி பள்ளிக்கு மாவட்டக் கல்வி நிர்வாகம் அனுப்பி வைத்தது.  

 

ஆசிரியர் மணிகண்டன், அந்தப் பள்ளியில் படித்து வரும் இரண்டு சிறுமிகள்  மற்றும் 3ம் வகுப்பு படித்து வரும் ஒரு சிறுவன் ஆகியோரை அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்று பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கி வருமாறு அனுப்பி வைத்துள்ளார்.

 

மணிகண்டன் சொன்ன தின்பண்டங்களை சரியாக வாங்கி வராமல், வெவ்வேறு பிராண்டு பிஸ்கட் பொட்டலங்களை குழந்தைகள் வாங்கி வந்துள்ளதாக தெரிகிறது. அவரும், மூன்று முறை குழந்தைகளை அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று தான் கூறிய பொருள்களை சரியாக கேட்டு வாங்கி வரும்படி அனுப்பியுள்ளார்.

 

அப்படியும் குழந்தைகள் சரியான பொருள்களை வாங்கி வராததால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், அவர்கள் வாங்கி வந்த பிஸ்கட் பொட்டலத்தை தரையில் ஓங்கி அடித்துள்ளார். சிறுவனை அழைத்த ஆசிரியர், தரையில் நொறுங்கிக் கிடந்த பிஸ்கட்டை, மண்டியிட்டபடி சாப்பிட வைத்துள்ளார்.

 

பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றதும், அந்தச் சிறுவன் வகுப்பில் நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் அழுதபடியே கூறியுள்ளான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மார்ச் 17ம் தேதி காலையில், பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் விசாரித்துள்ளனர். அதன்பிறகு, ராசிபுரம் காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, மாவட்டக் கல்வி நிர்வாகம் சார்பிலும் ஆசிரியர் மணிகண்டனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், அவர் மீதான புகார்கள் உண்மை எனத் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை பள்ளிக்கல்வி நிர்வாகம் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !