/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2023-08-11 at 4.29.59 PM_5.jpeg)
சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (39). இவருக்கு திருமணமாகி ரேணுகா (32) என்ற மனைவி உள்ளார். பாஸ்கருக்கு குடிப்பழக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. பாஸ்கர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும், ரேணுகா அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசி வந்ததால் பாஸ்கருக்கு ரேணுகாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பாஸ்கருக்கும் ரேணுகாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் , பாஸ்கர் ரேணுகாவை தினமும் அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், இது தொடர்பாக நேற்று முன் தினம் இரவு பாஸ்கருக்கும் ரேணுகாவுக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் சிறிது நேரத்தில் தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், வீட்டில் இருந்து கத்தியை கொண்டு ரேணுகாவை சரமாரியாக் குத்தியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த ரேணுகா ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் பாஸ்கரின் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு மயங்கிய நிலையில் இருந்த ரேணுகாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர், தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மனைவியை கத்தியால் குத்திய பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us