சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கழிவுகள் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து தாமாக முன்வந்து தென் மண்டலபசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்திருந்தது.
இது தொடர்பான வழக்கு கடந்த 9 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி சத்யா, எண்ணூரில் வெள்ளநீரில் எண்ணெய் கழிவுகள் கலந்தது குறித்து நிபுணர் குழுவை தமிழக அரசு ஏன் அமைக்கவில்லை? மாவட்ட ஆட்சியரும், வருவாய் நிர்வாகமும் என்ன செய்கின்றன? என்று கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர், விரிவான விசாரணை செய்து அறிக்கையை சமர்ப்பிக்கிறோம் என்று விளக்கமளித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்குவந்தது. அப்போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், “சென்னை துறைமுகத்தில் இருந்து 380 மீட்டர் தடுப்புகளும், காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 350 மீட்டர் தடுப்புகளும் கொண்டுவரப்பட்டுகடலில் எண்ணெய் கலப்பதை தடுக்க75 மீட்டர் அமைக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “எண்ணூரில் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய்யை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபடுவோருக்குபாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். எண்ணெய் கசிவு சம்பவத்துக்கு யார் காரணமோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
மேலும் எண்ணெய்யை அகற்றும் பணிகளுக்கு சிறுவர்களைஅனுப்ப வேண்டாம் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் சார்பில் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்குநாளை மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.