ADVERTISEMENT

கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு; பதற்றத்தில் நாகை மீனவர்கள் 

06:30 PM Mar 10, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சார்பில் பதிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயில் கடந்த 2 ஆம் தேதி இரவு உடைப்பு ஏற்பட்டது. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்த காரணத்தால் அப்பகுதி மீனவர்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாகி 5 நாட்கள் கடலுக்குச் செல்லாமல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மூன்று முறை ஆயில் குழாயில் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ததாக சிபிசிஎல் நிர்வாகம் அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் எண்ணெய் உள்ளிட்ட எந்தவித எரிவாயுக்களையும் குழாயில் கொண்டு செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதால் நாகூர் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு தொழிலுக்கு சென்றனர். குழாயில் கச்சா எண்ணெய் செலுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்த நிலையில், இன்று பம்ப்பிங் செய்ததால் வானுயரத்தில் கச்சா எண்ணெய் பீய்ச்சி அடித்து கடலில் கலந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் கடற்கரையில் மீண்டும் திரண்டனர். சரி செய்யப்பட்ட அதே இடத்தில் மீண்டும் கசிவு ஏற்பட்டதால் கச்சா எண்ணெய் துர்நாற்றம் வீசியதால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை வட்டாட்சியர் ராஜசேகர், அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட நிர்வாகம் உத்தரவை மீறி சிபிசிஎல் நிர்வாகம் செயல்படுவதாக மீனவர்கள் புகார் தெரிவித்தனர். நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சார்பாக பதிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குழாயை சுத்தம் செய்யும் பொழுது தண்ணீர் மட்டுமே வெளியானது என்றும், கச்சா எண்ணெய் குழாயில் செலுத்தவில்லை என்றும் சிபிசிஎல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT