இந்த புள்ளி விவரங்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார் நரேந்திர மோடி? கே.எஸ். அழகிரி

modi

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நீண்ட நெடுங்காலமாக ஜனசங்கமாக இருந்து பாரதிய ஜனதா கட்சியாக மாறிய பிறகு பின்பற்றிய மதவாத அரசியல் அணுகுமுறை காரணமாக அங்கே அமைதி குலைந்து, வன்முறை வளர்ந்து, பிரிவினைவாத இயக்கங்கள் வலிமை பெறுகிற நிலை ஏற்பட்டது. காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 2500 வீரர்கள் 78 பேருந்துகளில் ஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலையில் தங்களது பணியை முடித்து திரும்பிக் கொண்டிருந்த போது தற்கொலை படை தீவிரவாதியின் தாக்குதலினால் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இச்செய்தி நாட்டு மக்கள் மத்தியிலே கடும் துயரத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய எல்லையை காக்க, வன்முறை வெறியாட்டத்தை ஒடுக்க, பயங்கரவாதத்தை முறியடிக்க நமது ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரை தொடர்ந்து இழந்து கொண்டிருப்பது மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலில் பலியான 40 வீரர்களில் இருவர் தமிழர்கள் என்கிற துயரச் செய்தியும் நம்மை வேதனைக்கு உள்ளாக்குகிறது. இத்தாக்குதலில் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ks azhagiri

கடந்த நான்கு ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 93 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதேபோல, பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் 176 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 2014-18 முதல் 1315 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் 138 பேர் அப்பாவி பொதுமக்கள். 339 பேர் பாதுகாப்புப் படை வீரர்கள். 838 பேர் தீவிரவாதிகள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்டுவேன் என்று பலமுறை உரத்த குரலில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்த புள்ளி விவரங்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார் ? பாகிஸ்தான் மீது பழியை போட்டுவிட்டு தப்பிக்கப் போகிறாரா ? இத்தகைய தீவிரவாதம் அங்கே வளர்வதை தடுப்பதற்கு இதுவரை பாரதிய ஜனதா அரசு உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. மாறாக அங்கே அமைதி நிலவ வேண்டும், பயங்கர வாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுமேயானால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க காங்கிரஸ் கட்சி தயார் என்று திரு. ராகுல்காந்தி அவர்கள் உறுதி கூறியிருக்கிறார்.

எனவே, தலைநகர் தில்லியில் நடைபெறவுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் பண்டித ஜவஹர்லால் நேரு, ஷேக் அப்துல்லா ஆகியோரது மதச்சார்பற்ற கொள்கையின் காரணமாகவும், நெருக்கமான நட்பினாலும் இந்தியாவோடு இணைக்கப்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் அமைதி நிலவ உரிய நடவடிக்கைகளை எடுக்க மத்திய பா.ஜ.க. அரசு முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

crpf jammu and kashmir KS Azhagiri modi pulwama attack statement
இதையும் படியுங்கள்
Subscribe