Skip to main content

வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Published on 16/02/2019 | Edited on 16/02/2019
eps


 

காஷ்மீர் தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது கடந்த 14.02.2019 வியாழக்கிழமை நடத்திய திடீர் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 
 

அவர்களில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரி மேலதெருவைச் சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன் (வயது 30), அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவசந்திரனும் வீர மரணம் அடைந்தனர். 
 

வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

மாவட்டம் விட்டு மாவட்டம் தாவும் சிறுத்தை; இரவு பகலாகத் தேடும் வனத்துறை - மிரட்சியில் மக்கள்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People are afraid because of movement of leopards in Ariyalur

கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த செய்தியால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. இதனையடுத்து, தற்போது அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதனால் செந்துரையைச் சுற்றிலும் உள்ள கிராம மக்கள் பயத்திலும் அதிர்ச்சியிலும் தூக்கம் இன்றி தவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்(11.4.2024) இரவு செந்துறை அரசு மருத்துவமனை பகுதியில் சிறுத்தை புகுந்ததை பூங்கோதை என்ற பெண்மணி உட்பட சிலர் நேரில் பார்த்துள்ளனர். பயந்து மிரண்டு போன அவர்கள் உடனடியாக செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறை தீயணைப்புத்துறை பொதுமக்களும் அங்கு திரண்டனர். காவல்துறையினர் மருத்துவமனை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மருத்துவமனை சாலையில் குறுக்கே சிறுத்தை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து சிறுத்தையைத் தேட தொடங்கினர்.

People are afraid because of movement of leopards in Ariyalur

அப்போது ஒரு வெல்டிங் பட்டறை அருகே சிறுத்தை பதுங்கி இருந்ததை இளைஞர்கள் கண்டனர். அவர்கள் சிறுத்தையை விரட்ட சிறுத்தை அங்கிருந்து ஏந்தல் என்ற ஏரிக்குள் பாய்ந்து சென்று மறைந்துள்ளது. பின்னர் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், அந்தச் சிறுத்தை செந்துறை அருகில் உள்ள உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி, பகுதிகளில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காடுகளுக்குள் புகுந்து பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் வால்பாறை மலை காடுகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட வனத்துறையினரை செந்துறை வரவழைத்தனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிவதில் நிபுணர்கள் என்று கூறப்படுகிறது.

People are afraid because of movement of leopards in Ariyalur

இதையடுத்து அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமும் அப்பகுதியில் உள்ள ஓடை பகுதியில்  கண்காணித்ததோடு, சில இடங்களில் கூண்டு வைத்து அந்தக் கூண்டுக்குள் ஆடுகளை விட்டு சிறுத்தையை வரவழைத்து பிடிப்பதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது செந்துறைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது. நின்னையூர், பகுதியில் சிறுத்தையின் காலடித்தடம் பதிந்துள்ளது.

மேலும் செந்துறை பகுதியில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. மயிலாடுதுறை பகுதியில் நடமாடிய சிறுத்தை அங்கிருந்து காடுகள் அதை ஒட்டி உள்ள ஓடை பகுதிகள் வழியாக செந்துறை பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும், மேலும் அது அங்கிருந்து காடுகள் மற்றும் ஓடை வழியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சை மலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்தச் சிறுத்தை இதுவரை விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளையோ நாய்களையோ அடித்து உணவாக சாப்பிட்டதாக தகவல் இல்லை. அதன் வழிப்போக்கில் கிடைக்கின்ற உணவை சாப்பிட்டு சென்று கொண்டிருக்கிறது.

சிறுத்தையை பிடிக்கும் பணியில் தஞ்சாவூர் ,கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சிறுத்தை நடமாட்ட அச்சத்தினால் செந்துறைப்பதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

People are afraid because of movement of leopards in Ariyalur

சிறுத்தை பிடிபடுமா? தப்பி செல்லுமா? என்று மக்கள் பதைபதைப்புடன் கிராமப்புறங்களில் பேசிக் கொள்கிறார்கள். இதனால் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட கிராமங்களில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைந்து காணப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம், சிறுத்தை நடமாட்டத்தினால் ஏற்பட்ட பரபரப்பு மறுபக்கம் என மக்கள் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.