
வாணியம்பாடியில் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியில் பெண்கள் அதிகப்படியாக கலந்து கொண்ட நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்து குறித்து வருவாய்த்துறை மற்றும் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஆண்டுதோறும் தைப்பூச விழாவை முன்னிட்டு தனியார் தொழிலதிபர் ஒருவர் 5000 பேருக்கு இலவசமாக வேட்டி சேலை வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். நாளை தைப்பூசம் என்ற நிலையில் வேட்டி சேலை வழங்குவதற்கான டோக்கன் இன்று வழங்குவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதனைப் பெறுவதற்கு வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெண்கள் வாணியம்பாடி ஜின்னா பாலம் அருகே திரண்டனர்.
சுமார் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்தனர். அப்பொழுது டோக்கனை வாங்க முண்டியடித்துசென்றபோது கூட்ட நெரிசலில் பலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மயக்கமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் சில பெண்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலவச வேட்டி சேலைக்கான டோக்கன் வாங்கும்போது கூட்ட நெரிசலில் பெண்கள் உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)