Advertisment

இந்தியா முழுவதும் கரோனா நோய்த் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், சில மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகத்திலும் நோயின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள், ஊரடங்கு என நடைமுறையில் இருந்தாலும், மக்களின் அசாதாரண போக்கு கரோனா பரவல் அதிகரிக்க காரணமாக உள்ளது. தமிழகத்தில் ஏழு மாதங்களுக்குப் பின்னர் நாளை (25.04.2021) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், நாளை சென்னையில் முழு ஊரடங்கு என்பதால் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனையகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வாகனங்கள் வருகை அதிகரிப்பால் மார்க்கெட் வளாகத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாலையில் சில்லறைவணிகம் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் பெரிய அளவில் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் பயமும் வெயிலின் தாக்கமும்தான் காரணம் என்கிறார்கள் வியாபாரிகள்.மேலும் மார்க்கெட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சுமைதூக்கிகள் பெரும்பாலும் முகக்கவசம் இல்லாமல் பணிபுரிவதைப் பார்க்க முடிந்தது. யாருக்கும் கரோனா என்ற பயமே இல்லாமல் இருந்தது போல் காணப்பட்டது.