Advertisment

ஆடி, அமாவாசை அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுகள் ஆறு, கடல் கரைகளில் நடத்தப்படுவது வழக்கம். அதே போல கிழக்கு கடற்கரைச் சாலையில், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கோடியக்கரை பகுதியில், ஆடி அமாவாசையில் திதி, தர்ப்பணம் கொடுத்து பிரார்த்தனை செய்யும் விதமாக புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், பொன்னமராவதி, கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடுமற்றும்தஞ்சை மாவட்டத்தின் பலபகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கோடியக்கரை கடல் பகுதியில் நவதானியங்கள், நெல், அரிசி, அவல், பொறி ஆகிய பொருட்களை வைத்து முன்னோர்களுக்கு திதி செய்வது வழக்கம்.

இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் ஒன்று சேர்வதை தவிர்க்கவும், கரோனா தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகவும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் உமாமகேஸ்வரி மணமேல்குடி கோடியக்கரை பகுதியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் திதி கொடுக்கவும் புனித நீராட அனுமதி இல்லை என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பினால் கடற்கரைப் பகுதி செல்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் வெளியூரிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினமான இன்று பொதுமக்கள் வந்து செல்லும் கடற்கரை வெறிச்சோடிகாணப்பட்டது. போலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

இந்த நாளில் எங்கிருந்துதான் ஆயிரக்கணக்கான காகங்கள் வருமோ.. ஆண்டு தோறும் வருவது போல இந்தஆண்டும் காகங்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரையில் குவிந்துள்ளது. ஆனால் ஏமாற்றங்களே மிஞ்சியது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு கோடியக்கரை கடற்கரையில் ஏராளமானோர் வந்த நிலையில், இந்த வருடம் யாருமே அனுமதிக்காததால் வெறிச்சோடிய காணப்பட்டது.