Skip to main content

6 பேர் கொலை வழக்கு; வி.ஏ.ஓவிடம் குறுக்கு விசாரணை

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

Cross-examination VAO case of passed away 6 people Salem court!

 

சேலம் அருகே நடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு சாட்சியான விஏஓவிடம் குறுக்கு விசாரணை நடந்தது. 


சேலம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் குப்புராஜ். ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர். இவருடைய மனைவி சந்திரா, மகன் ரத்தினம், மருமகள் சந்தானகுமாரி, பேரன் கவுதம், பேத்தி விக்னேஸ்வரி ஆகியோர் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து மல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். 


இந்நிலையில், குப்புராஜின் மூத்த மகன் சிவகுரு, 17 வயதான பேரன் ஆகியோர் தாங்கள்தான், சொத்துத்தகராறில் கொலை செய்ததாகக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஒருகட்டத்தில் வழக்கு விசாரணை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சிவகுரு, இவருடைய 17 வயதான மகன், மனைவி மாலா, மகள் யுவபிரியா, மருமகனும் காவலருமான ரஜினி மற்றும் செந்தில்குமார், வெடிகாரன்புதூர் சேகர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை சேலம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை (பிப். 17) நீதிபதி ரவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  இந்தக் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் வி.ஏ.ஓ சுப்பிரமணி முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்டது. 

 

இதையடுத்து வி.ஏ.ஓ சுப்ரமணியிடம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடந்தது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சூரிக்கத்தி, நைலான் கயிறு மற்றும் காவலர் ரஜினி பயன்படுத்திய அலைபேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, சாட்சியக்குறியீடு செய்யப்பட்டு இருந்தன. அவற்றை அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதி முன்பு காண்பித்தனர். 3 மணி நேரம் குறுக்கு விசாரணை நடந்தது. மீண்டும் விசாரணை வரும் 28ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.