Skip to main content

வாய்க்காலில் உலா வரும் முதலைகள்; விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதி

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

crocodiles strolling irrigation way farmers and public panic 

 

சிதம்பரம் நகரத்தை ஒட்டியுள்ள பாலமான் வாய்க்காலானது வடக்கு பிச்சாவரம், தெற்கு பிச்சாவரம், நற்கந்தன்குடி, கொடிபள்ளம், கோவிலாம்பூண்டி, மீதிகுடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குப் பாசன வசதிக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. 

 

இந்த வாய்க்காலில் மழைக் காலங்களில் சிதம்பரம் அருகே உள்ள வக்கரமாரி ஏரியில் உள்ள முதலைகள்  மற்றும் அதன் குட்டிகள், சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள் மற்றும் குளங்கள் போன்ற தாழ்வான நீர்நிலைப் பகுதிகளில் தஞ்சம் அடைந்து வருகின்றன. இதுபோன்று தஞ்சம் அடைந்த முதலைகள் வயல்வெளியில் வேலை செய்துவிட்டு மாலை நேரங்களில் குளிக்கவும் கை, கால்களைக் கழுவும்  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முதலை கடிக்கு ஆளாகி  சிதம்பரம் பகுதியில் பல பேர் உயிரிழந்து உள்ளனர்.

 

மேலும் பலர்  கால் மற்றும் கைகளை இழந்து, காயங்களுடன் சிகிச்சை பெற்று  வருகின்றனர். இதேபோல் சிதம்பரம் ஓ.பி மெயின் ரோடு வழியாகச் செல்லும் பாலமான் வாய்க்காலில் முதலைகள் தற்போது தஞ்சமடைந்துள்ளன. இவ்வாறு தஞ்சமடைந்த முதலை ஒன்று புதன்கிழமை மாலை வாய்க்கால் கரையில் படுத்திருந்ததைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கூச்சலிட்டனர். இதனால் முதலை வாய்க்காலின் உள்ளே சென்றுவிட்டது.  இந்த வாய்க்காலில் இதேபோல் பெரிய மற்றும் சிறிய அளவிலான பல முதலைகள் உள்ளதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

இதனால் பாசனத்திற்குச் செல்லும் நீரில் முதலைகள் சென்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகளைக் கடிக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே இந்த முதலையைப் பிடிக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அலுவலர்கள், இந்த வாய்க்காலில் முதலை உள்ளது எனப் பெயர்ப் பலகை வைத்துள்ளனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்குத் துண்டுப் பிரசுரம் வழங்கியும், பொதுமக்கள் யாரும் வாய்க்கால்களில் இறங்கி கை மற்றும் கால்களைக் கழுவ வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

'இரவில் வெளியே வர வேண்டாம்'-அரியலூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 'Don't come out at night'-Admonition to people of Ariyalur

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ரஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனத்துறை மருத்துவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் சிறுத்தை, எலி, தவளை, நத்தை, மான், மயில் உள்ளிட்ட பறவைகளை  உண்ணக்கூடியது. இந்த நடமாடும் சிறுத்தைக்கு மற்ற உயிரினங்களைத் தாக்கும் எண்ணம் இல்லை. வளர்ப்பு பிராணிகளைச் சீண்டாத சிறுத்தை மனிதர்களிடம் பயந்த சுபாவம் கொண்டிருக்கும். அரியலூரில் நடமாடும் சிறுத்தை ஏலகிரி மலைக்கோ அல்லது அருகில் உள்ள பச்சை மலைக்கோ செல்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.