ADVERTISEMENT

“முதியவரை வாயில் கவ்வியபடி முரண்டு பிடித்த முதலை”... போராடி சடலத்தை மீட்ட தீயணைப்புத் துறையினர்!

04:53 PM Sep 16, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது பழைய நல்லூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(65). இவர் நேற்று இரவு ஏழு மணி அளவில் பழைய கொள்ளிடம் ஆற்றில் உள்ள தண்ணீரில் குளிப்பதற்காக இறங்கி உள்ளார். அப்போது திடீரென தண்ணீரில் கிடந்த முதலை ஒன்று அவரை கடித்து இழுத்துச் சென்றுள்ளது. கோபாலகிருஷ்ணன் கத்தி சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கழிதடி போன்ற ஆயுதங்களுடன் ஓடிச்சென்று முதலையை அடித்துள்ளனர். ஆனாலும் அந்த முதலை அவரை விடாமல் இழுத்துச் சென்றது. வேளக்குடி பகுதிவரை தண்ணீரில் இழுத்துச் சென்றுள்ளது.

அதற்குள் அண்ணாமலை நகர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஊர் மக்களோடும் இணைந்து படகு மூலம் முதியவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 10 மணி அளவில் ஒரு பகுதியில் முதலை கோபாலகிருஷ்ணனை சடலமாக வாயில் கவ்வியபடி கடித்துக் குதறிக் கொண்டிருந்தது. முதலையிடமிருந்து கோபாலகிருஷ்ணன் சடலத்தை மீட்பதற்கு கடும் முயற்சி செய்தனர். ஆனால் முதலை விடாமல் முரண்டு பிடித்தது. முதலையை அடித்து விரட்டிவிட்டு கோபாலகிருஷ்ணன் உடலை ரத்த காயங்களுடன் சடலமாக மீட்டுள்ளனர். ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் முதலையின் வாயில் அகப்பட்டுக் கடித்துக் குதறப்பட்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பழைய கொள்ளிடம் மற்றும் அதன் உபரி நீர் செல்லும் பகுதிகளில் ஏராளமான முதலைகள் உள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை பத்துக்கும் மேற்பட்டவர்களைக் கடித்துக் குதறி அதனால் உயிரிழந்துள்ளனர். பலர் கை, கால் இழந்து காயமடைந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு பனங்காடு என்ற பகுதியில் ஒரே நாளில் இரண்டு பேர் முதலை கடிக்கு ஆளாகி உள்ளனர். தற்போது முதலையின் வாயில் அகப்பட்டு இறந்துபோன கோபாலகிருஷ்ணனின் சகோதரர் அறிவானந்தம் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது முதலை அவரை இழுத்துச் சென்று கடித்துக் குதறியதால் இறந்துபோனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதலைகள் மனிதர்களை மட்டுமல்ல கொள்ளிடம் கரையோரம் மற்றும் ஆற்றங்கரையோரம், ஓடக்கரை ஓரத்தில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடு, மாடுகளையும் விட்டு வைக்கவில்லை, அவற்றையும் பிடித்து கடித்துத் தின்று விடுகிறது.

இதில் அதிகம் பாதிக்கப்படும் கிராமங்கள் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தாலுகாவில் உள்ள அகரம் நல்லூர், வேளக்குடி, சிதம்பரம் கஞ்சங்குல்லை என இப்படிப் பல கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். வனத் துறையினரிடம் அவ்வப்போது பிடிபடும் முதலைகளைச் சிதம்பரம் அருகே உள்ள பத்திரம் மாதிரி குளத்தில் கொண்டு சென்று விடுகின்றனர். ஆனால் அந்த குளத்திலிருந்து முதலைகள் எளிதாக வெளியேறி ஆறு வாய்க்கால் பகுதிக்குச் சென்று விடுகின்றன. எனவே பெரிய அளவில் சிதம்பரம் பகுதியில் முதலைப் பண்ணையை உருவாக்கி ஒட்டுமொத்த முதலைகளையும் பிடித்துக் கொண்டு சென்று அதில் விடவேண்டும். முதலைகளின் பிடியிலிருந்து கிராம மக்களை விடுதலை செய்ய வேண்டும். முதலையின் அச்சத்திலிருந்து சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் கிராம மக்களை அரசு காப்பாற்ற முன்வர வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி கிராம மக்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT