'Criminal cases against Isha' - District Superintendent of Police Karthikeyan interview

தன்னுடைய இரண்டு மகள்களையும் ஈஷா யோகா மையத்திலிருந்து மீட்டுத் தர வேண்டும் என பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த 30.09.2024 அன்று நடைபெற்றது. சம்பந்தப்பட்ட மகள்கள் மற்றும் பெற்றோர்களிடம் நீதிபதிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

Advertisment

விசாரணையின் பொழுது பெற்றோர்கள் தங்களை அவமானப்படுத்தி விட்டதாக மகள்கள் கூறினர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் 'நீங்களே முற்றும் துறந்த ஞானிகள் ஆன பின் ஏன் அதைப் பொருட்படுத்த வேண்டும்' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதேபோல் ஜக்கி வாசுதேவ் தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்த புகைப்படத்தையும் நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

Advertisment

தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு இவர்களுக்கு ஏன் சன்னியாசி நிலை? என கேள்வி எழுப்பிய நீதிபதி, நாங்கள் யாருக்கும் எதிராகவும் இல்லை ஆதரவாகவும் இல்லை. ஆனால் பல சந்தேகங்கள் உள்ளது' என ஐயப்பாடை தெரிவித்தனர். தொடர்ந்து கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஈஷா யோகா மையத்தின் மீதான வழக்குகள் குறித்த விவரங்களை வரும் அக்.4 தேதிக்குள் தர காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து 01.10.2024 அன்று ஈஷா யோகா மையத்தில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடைபெற்றது. டிஎஸ்பி சிவகுமார் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் நல குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். போலீசாரின் அதிரடிப்படை வாகனம், அரசு அதிகாரிகள் வாகனம் என 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளே சென்றது. சுமார் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் (02.10.2024) ஈஷா யோகா மையத்தில் விசாரணை தொடங்கி நடைபெற்றது.

Advertisment

இரண்டு நாள் விசாரணை முடிவடைந்த நிலையில், நாளை நீதிமன்றத்தில் காவல்துறை இது தொடர்பான தகவலை தாக்கல் செய்ய இருக்கிறது. செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவிக்கையில், '' நேற்று முன்தினம் இல்லாமல் நேற்று ஹெல்த் இன்ஸ்பெக்டர், ட்ரக் இன்ஸ்பெக்டர், ஃபுட் சேப்டி டிபார்ட்மெண்டில் இருந்து எல்லாம் வந்திருந்தார்கள். டாக்டர் வந்திருந்தார்கள். இரண்டு நாட்களில் எந்த அளவிற்கு கவர் பண்ண முடியுமோ அந்த அளவிற்கு வழக்குகளை கவர் செய்து இருக்கிறோம். வெளிநாட்டில் இருந்து வந்து யோகா மையத்தில் தங்கி இருப்பவர்கள் குறித்ததகவல்களையும் சேகரித்துள்ளோம். அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. நாளை கோர்ட்டில் சமர்ப்பிப்போம். இதுவரை அவர்கள் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் எல்லாவற்றையும் எடுக்க சொல்லி இருக்கிறார்கள். அவை எல்லாவற்றையும் எடுத்துள்ளோம். அதில் இரண்டு மூன்று குறிப்பிடத் தகுந்த வழக்குகள் இருக்கிறது. அதைப் பற்றிய முழு விவரங்களையும் நாங்கள் சமர்ப்பிப்போம்'' என்றார்.