ADVERTISEMENT

போலி பில் போட்டால் கிரிமினல் நடவடிக்கை பாயும்! ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

10:20 AM Jun 19, 2022 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரேஷன் கடைகளில் போலி பில் போடப்படுவது, தரமற்ற பொருள்களை வழங்குவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

ரேஷன் கடைகளில் சில விற்பனையாளர்கள் போலி பில் உருவாக்குவது குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன. சில நேரங்களில், கார்டுதாரர்கள் ஒரு பொருளை வாங்கினாலும், தகுதியான அனைத்துப் பொருள்களுக்கும் உள்ளீடு மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கார்டுதாரர்களால் வாங்கப்படாத பொருள்களுக்குப் போலி பில் உருவாக்குவது குற்றச்செயலாகும். அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக பொதுவிநியோகத்திட்ட மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டத்தைக் கூட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. அக்கூட்டங்களில் மண்டல இணைப்பதிவாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

ரேஷன் கடைகளில் ஆய்வு செய்யும் அலுவலர்கள் குறைந்தது 10 ரேஷன் கார்டுதாரர்களுடன் உரையாடி ரேஷன் கடையின் செயல்பாடு, விற்பனையாளரின் அணுகுமுறை உள்ளிட்டவை குறித்து கருத்துகளைப் பெற்று அறிக்கையைக் கையொப்பத்துடன் பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

அத்தியாவசிய, சிறப்பு பொதுவிநியோகத் திட்ட பொருள்களின் இருப்பு போன்ற அனைத்து கட்டாய தகவல்களையும் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தகவல் பலகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

மண்டலங்களில் உள்ள ரேஷன் கடைகளின் விற்பனையாளர்களுடன் மாதாந்திர கூட்டம், அந்தந்த துணைப்பதிவாளர்களால் நடத்தப்பட வேண்டும். இணைப்பதிராளர்கள் காலாண்டு கூட்டம் நடத்த வேண்டும்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தரமற்ற பொருள்களை ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கக் கூடாது. கட்டுப்பாடற்ற பொருள்களின் தரம் குறித்து வழக்கமான சோதனைகள் செய்யப்பட வேண்டும்.

விற்பனையாளர் பற்றாக்குறை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட சங்கங்கள் மூலம் ரேஷன் கடைகளில் பணி செய்யும் பொருட்டு பணியாளர்களை பணிமாறுதல் அடிப்படையில் பணிபுரிய அனுமதிக்கலாம்.

இது தொடர்பாக உரிய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி பொது விநியோகத் திட்டத்தை எவ்வித புகாருக்கும் இடமின்றி சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT