கலைக்குழு பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தவறாக நடந்துகொள்ள டிரைவர் முயன்றதாகவும், கலைக்குழுவில் வேலை பார்த்த பெண் ஒருவரை பிரித்து கூட்டிச் சென்றுவிட்டதாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
உமாராணி என்பவர் கோடாங்கி என்ற பெயரில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டைப்பட்டியில் கலைக்குழு நடத்தி வருகிறார். உமாராணியிடம் டிரைவராக வேலை பார்த்த பிரேம்குமார், அந்தக் குழுவில் உள்ள பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றிருக்கிறார். அதனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவர் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டார். அதன்பிறகு, உமாராணியிடம் தொலைப்பேசியில் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசி வந்துள்ளார். மேலும், அந்தக் கலைக்குழுவில் வேலை பார்த்த சரண்யாதேவியை குழுவிலிருந்து பிரித்துக் கூட்டிச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், கோடாங்கி கலைக்குழு பயிற்சி மையத்துக்கு வந்த பிரேம்குமார், தான் கூட்டிச்சென்ற சரண்யாதேவி குறித்தும் உமாராணி குறித்தும் மோசமான வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, உமாராணி அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் பிரேம்குமார் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகியிருக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜுவிடம் பேசினோம். “சரண்யாதேவி தற்போது தூத்துக்குடியில் இருக்கிறார். அவரை அழைத்து விசாரித்த பிறகு நடவடிக்கை எடுப்போம்.” என்றார்.