
கோவை புலியகுளம் அடுத்த உடையாம்பாளையம் அசோக் நகரை சேர்ந்த சகோதரர்கள் கார்த்தி மற்றும் சூர்யா. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் உள்ள மைதானத்தில் சூர்யா தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தான். அப்போது செல்வா என்ற இளைஞருடன் மோதல் ஏற்பட்டதில் சூர்யா தாக்கப்பட்டான். இதை சூர்யா தனது சகோதரர் கார்த்தியிடம் சொல்ல, நேற்று இரவு சாலையில் சென்று கொண்டிருந்த செல்வாவை தடுத்து நிறுத்திய கார்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டான்.
அப்போது தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினான் கார்த்தி. இதனையடுத்து அங்கிருந்து சென்ற செல்வா தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்தான். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த கார்த்தியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது 6 பேர் கொண்ட கும்பல். கார்த்திக்கு கை,கால் வயிற்றுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வரும் பீளமேடு போலீசார் செல்வா மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேரை தேடி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் தனது நண்பர்களுடன் வந்த செல்வா, கார்த்தியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.