
ஜம்மு காஷ்மீர் ரஜோரி அருகே உள்ள ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நேற்று எதிர்பாராத விதமாகத் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததோடு இரண்டு பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர். நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் எல்லையில் பயங்கரவாத தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில் ஒருவர் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லஷ்மணன் (24) என்பது தெரியவந்துள்ளது. வீரமரணமெய்திய தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ள முதல்வர், அவரது குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

ராணுவ வீரரின் மரணத்தால் மதுரை டி.புதுப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. ராணுவ வீரர் லஷ்மணனின் தந்தை தர்மராஜ் அளித்த பேட்டியில், ''எனக்கு ரெண்டு பசங்க. ஒருத்தன் லஷ்மணன். இன்னொருத்தன் ராமன். அதுல லஷ்மணன் தான் ஆர்மிக்கு போனான். ராமனையும் ஆர்மிக்கு அனுப்ப தயாராக இருக்கோம்'' என்றார். அதேபோல் லஷ்மணனின் சகோதரர் ராமன், ''எல்லாரோடும் ஜாலியா பேசுவான். அவனுக்கு கிரிக்கெட் என்றால் ரொம்ப புடிக்கும், கிரிக்கெட்டும், ஆர்மியும் அவனுக்கு உசுரு, தீய பழக்கம் எதுவும் இல்ல. ரெண்டுபேரும் ஒரே நேரத்தில்தான் செலக்ஷனுக்கு போனோம். தம்பி செலக்சன் ஆகிட்டான். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கல. ஆனா திடீர்னு மரண செய்தி வந்துருச்சு'' என்றார்.
இந்நிலையில் வீரமரணம் அடைந்த லஷ்மணனின் உடல் நாளை மதுரை கொண்டுவரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)