ADVERTISEMENT

 பிரபல நகைச்சுவை நடிகர் கிரேசிமோகன் காலமானார்

02:13 PM Jun 10, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

பிரபல நகைச்சுவை நடிகரும், கதை, திரைக்கதை ஆசிரியரும், வசனகர்த்தாவும், நாடகக்கலைஞருமான கிரேசிமோகன்(66) மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2 மணிக்கு காலமானார்.

ADVERTISEMENT


கிரேசியின் இயற்பெயர் ரங்காச்சாரி மோகன். சென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே 1972ஆம் ஆண்டு கல்லூரி விழாவிற்காக Great Bank Robbery என்ற நாடகம் எழுதினார். அதற்காக சிறந்த எழுத்தாளர், சிறந்த நடிகருக்கான விருதை அன்று நாடகத்திற்கு வந்திருந்த கமல்ஹாசன் வழங்கினார். பின்னாளில் கமல்ஹாசன் மூலமாகவே திரையுலகிலும் பிரவேசம் செய்தார் கிரேசி.

1976ல் எஸ்.வி.சேகர் நாடகக் குழுவிற்காக, "கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்" என்ற நாடகம் எழுதினார். நாடகத்தின் வெற்றியே பின்னாளில் கிரேசி என்ற சொல்லை அவர் பெயருக்கு முன்னால் சேர்த்தது. ரங்காச்சாரி மோகன், கிரேஸி மோகன் ஆனார்.


1979ல் இருந்து ஒரு சொந்தக்குழுவை ஆரம்பித்து நாடகங்களை அரங்கேற்றினார். இவரது நாடகங்கள் ஆயிரக்கணக்கான முறைகள் நடந்துள்ளன. இவரது நாடகங்களில் சாக்லேட் கிருஷ்ணா என்ற நாடகம் மட்டும் இதுவரை 900 முறைகள் நடந்துள்ளது. கிரேசியின் வெற்றி நாடகங்களில் அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், மேரேஜ் மேட் இன் சலூன்,மாது பிளஸ் டூ, மாது மிரண்டால், மீசை ஆனாலும் மனைவி, கிரேசி கிஷ்கிந்தா, ஒரு பேபியின் டயரிக் குறிப்பு, ஜுராசிக் பேபி ஆகியன குறிப்பிடத்தக்கவை.


கிரேசியின் ‘மேரேஜ் மேட் இன் சலூன்’ நாடகத்தை இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ‘பொய்க்கால் குதிரை’ என்று திரைப்படமாக எடுத்தார். கமல்ஹாசனுடன் சேர்ந்து கிரேசி 'சதி லீலாவதி, மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், அபூர்வ சகோதரர்கள்,ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதியதுடன் சில வேடங்களில் நடிக்கவும் செய்தார். வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்திற்கும் வசனம் எழுதினார்.


ரஜினிகாந்த் நடித்த ’அருணாச்சலம்’, சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய ‘ஆஹா’, ராஜமவுலி இயக்கிய ‘நான் ஈ’ போன்ற படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். 7 தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதினார்.


கிரேசிமோகன் நகைச்சுவை எழுத்தில் பெயர் வாங்குவதற்கு காரணம் அவரது ஜானகி டீச்சர். அதனால் அவருக்கு செலுத்தும் மரியாதையாகத்தான் கிரேசியின் எல்லா படைப்புகளிலும் ஜானகி கேரக்டரை வலியுறுத்தியுள்ளார்.

கிரேசியின் முதல் நாடகமான அலாவுதீனிலிருந்தே ஹீரோயின் பெயர் ஜானகிதான். கிரேசி நடித்த முதல் படமான `அபூர்வ சகோதரர்க'ளில் கவுதமி பெயர் ஜானகி. `தெனாலி’ படத்தில் ஜோதிகா பெயர் ஜானகி. `வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் சிநேகா பெயர் ஜானகி. `ஜானகி’ என்று பெயர் வைப்பதில் யாருக்காவது ஆட்சேபம் இருப்பதாகச் சொன்னால், அவர்களுக்கு எழுதவே மறுத்துவிடுவார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT