சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே வேளச்சேரியில் இருந்து பெருங்குடி நோக்கிச் செல்லக்கூடிய வகையில் இணைப்பு சாலை அமைந்துள்ளது. இந்த இணைப்பு சாலையை ஒட்டி சேஷாத்திரிபுரம் முதலாவது பிரதான சாலை அமைந்துள்ளது. இந்த சாலைக்கு அருகில் தனியார் நிறுவனத்தின் சார்பில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அதாவது அடித்தளம் அமைக்க (பேஸ்மெண்ட்) ராட்சத கனரக இயந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்வலைகளின் காரணமாகச் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சுமார் 100 முதல் 150அடி தொலைவிற்கு மிக பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவ்வழியாக எவ்வித வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். அதே சமயம் இந்த கட்டுமான பணி நடைபெறக்கூடிய இடத்திற்கு அருகில் உள்ள கட்டுமானங்களின் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள நபர்களையும் காவல்துறை சார்பில் அப்புறப்படுத்தப்பட்டனர்.
மேலும் இந்த பகுதியில் யாரையும் உள்ளே அனுமதிக்க விடாமல் சாலை முற்றிலுமாக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்திற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே திடீரென சாலையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.