/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pm ok322.jpg)
பட்டாசு ஆலை விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம்ரூபாய் வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட அச்சங்குளத்தில் இயங்கிவந்த தனியார் பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில், 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 36 பேர் சாத்தூர், கோவில்பட்டி மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்மந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து, தீயை அணைத்து, இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்டுள்ளனர். அதேபோல், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். இது தொடர்பாக ஏழாயிரம் பண்ணை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pm32444333.jpg)
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூபாய் 2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50,000 வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை விபத்து வருத்தம் அளிக்கிறது.விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி,உடனடியாக மீட்பு, நிவாரண உதவிகளை மாநில அரசு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)