/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cd-cpim-vasuki-house-art.jpg)
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடியின மக்கள் 11 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை குடியேற விடாமல் அப்பகுதியில் உள்ள மற்றொரு சமூகத்தினர் இவர்களுக்கு வழங்கிய இடத்தை ஆக்கிரமித்து பயிர் செய்து வந்தனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று பலமுறை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் இடத்தினை மீட்டு கொடுக்க வேண்டும் என பரங்கிப்பேட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் பழங்குடி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து அப்போதைய ஒன்றிய செயலாளராக பணியாற்றிய எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமையில் கட்சியினர் ஒன்றிணைந்து பழங்குடி மக்களுக்காக வழங்கப்பட்ட இடத்தை மீட்க பல கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் விளைவாக ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்த பழங்குடி மக்களின் இடத்தை அரசு கைப்பற்றி ஒப்படைத்தது. அதன் பின்னர் அந்த இடத்திற்கு செங்கொடி நகர் என பெயர் வைத்தனர்.
இதனை தொடர்ந்து அவர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று முதல் கட்டமாக ஊரக வளர்ச்சி துறை சார்பில் சிறப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் 4 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் 4 வீடுகள் கட்டப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் வீடுகளின் திறப்பு விழா இன்று (22.06.2025) நடைபெற்றது. இவ்விழாவிற்கு கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ. வாசுகி கலந்து கொண்டு புதிய வீடுகளை வீட்டின் பயனாளி அம்மனியுடன் இணைந்து திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
அதன்பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், “இது ஒட்டுமொத்த கட்சி தோழர்கள் போராடி பெற்ற வெற்றியாகும். செங்கொடி இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி. அதேபோல் இந்த இயக்கம் இந்த பகுதியில் 115 பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழை பெற்றுக் கொடுத்துள்ளது. இது சாதாரண விசயம் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சி சாதி, மதம், ஏழை, பணக்காரன் என வித்தியாசம் இல்லாமல் பணியாற்றக்கூடிய கட்சியாக செயல்பட்டு வருகிறது. எனவே அடிதட்டு ஏழைகளின் பிரதிநிதியாக செங்கொடி இயக்கம் என்றும் பணியாற்றியற்கு இதுவே உதாரணம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cd-cpim-vasuki-house-art-1.jpg)
தலைக்கு மேலே ஒழுகாமல் ஒரு கூரை இருந்தால் போதும் என்ற மக்களுக்கு கம்பீரமாக காங்கிரட் வீடு கிடைத்துள்ளது. அவர்கள் மனிதர்களாக நாம் வாழ போகிறோம், அந்த உரிமையோடு இருக்கப் போகிறோம், அந்த நிலைமைக்கு நாம் முன்னேறி இருக்கிறோம் என்றால் நிச்சயமாக இதற்கு செங்கொடி இயக்கம் தான். அதேபோல் இந்த இயக்கம் இந்த மக்களுக்கு ஆற்றி பணிகளை பார்த்து சுற்றுவட்டபகுதியில் உள்ள 11 கிராமத்தில் உள்ள பழங்குடி மக்களின் தொடர்பு கிடைத்துள்ளது என கட்சியினர் கூறினார்கள். இங்குள்ள பழங்குடி மக்கள் அவர்களிடத்தில் செங்கொடி இயக்கம் எவ்வாறு பணியாற்றியது என்பது குறித்து எடுத்துக் கூறி செங்கொடி இயக்கப் பாதையில் ஒன்றிணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி புரட்சிகரமான இலட்சியத்துடன்கூடிய அரசியல் பாதையில் முன்னேறனும். இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்” எனப் பேசினார்.
இதனைதொடர்ந்து மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்ட செயலாளர் கோ.மாதவன் ஆகியோர் இந்த செங்கொடி நகர் உருவாகுவதற்கு நடைபெற்ற போராட்டங்கள் குறித்து பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழ. வாஞ்சிநாதன், மூத்த உறுப்பினர் கற்பனை செல்வம், வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய், மாவட்ட குழு உறுப்பினர்கள், மல்லிகா, அம்சையாள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வேல்முருகன், அசன்முகமது, சுனில்குமார், கொளஞ்சியப்பன், கோபிநாத், விமலா, தனசேகர், ஜீவா, ராமனுஜம், செங்கொடி நகரின் கிளை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், சந்திரகலா, பழங்குடி இன மக்கள் நலச்சங்கத்தின் கடலுர் மாவட்ட செயலாளர் ரஞ்சிதா உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம். ஜெயசீலன் அனைவருக்கும் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் இருளர் பழங்குடி மக்களின் புரட்சிகர நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பார்த்து ரசித்த அனைவரும் நடனமாடிய பழங்குடி மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)