Skip to main content

"விருத்தாசலத்திற்கு கூடுதல் காவல்நிலையம் வேண்டும்" - சி.பி.எம் கோரிக்கை!

Published on 16/11/2020 | Edited on 16/11/2020

 

CPM demands  additional police station to virudhachalam


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் அசோகன், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஆகியோர்களுக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில், "விருத்தாசலம் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். நகரத்தைச் சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 


கடந்த காலங்களில் விருத்தாசலம் பகுதி குறுகிய அளவில் இருந்துள்ளது. அதைக் கணக்கில்கொண்டு காவல் நிலையம் தொடங்கப்பட்டது. தற்போது மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப காவல் நிலையப் பணிகள் அதிகரித்துள்ளன. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ற வகையிலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையிலும் விருத்தாசலம் நகரில், மேலும் ஒரு காவல் நிலையம் அமைக்க வேண்டும். சமீபகாலமாக இப்பகுதியில் தொடர் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 


எனவே, இப்பகுதியில் உள்ள மக்களைப் பாதுகாக்கும் வகையிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உடனுக்குடன் சரி செய்யும் அளவிலும் கூடுதல் காவல் நிலையம் அமைக்க வேண்டும்" என அசோகன் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.