
ஓசூரில் ஆணவக்கொலை செய்யப்பட்ட நந்தீஸ் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
ஓசூர் அருகே சூடுகொண்டப்பள்ளியில் காதல் திருமணம் செய்த நந்தீஸ், சுவாதி ஆகியோர் பெண் வீட்டாரால் சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் நந்தீஸின் குடும்பத்தினருக்கு இன்று (நவம்பர் 17, 2018) நேரில் ஆறுதல் கூறினார்.
அப்போது பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:
காதல் திருமணம் செய்த நந்தீஸ் & சுவாதி தம்பதியை பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் ஆசை வார்த்தைகளைக்கூறி மைசூரு அருகே மாண்டியாவுக்கு கடத்திச்சென்று உள்ளனர். அங்கே அவர்களை மிகக்கொடூரமான முறையில் கொலை செய்து, உடல்களைச் சிதைத்து, காவிரி ஆற்றில் வீசியுள்ளனர். கடந்த நான்கு முன்பே, நந்தீஸை காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்தும், அதன் மீது உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த சம்பவம், மனசாட்சி உள்ள அனைவரையும் உலுக்கியுள்ளது. இதுபோன்ற ஆணவக்கொலை சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று இடதுசாரிகள், பல்வேறு தலித் அமைப்புகள் வலியுறுத்தியும் தமிழக அரசு காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.
இதுபற்றி சட்டப்பேரவையில் பேசும்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகளே நடக்கவில்லை என்று பகிரங்கமாக கூறினார். இந்த சம்பவத்திற்குப் பிறகும், அவர் அதையே சொல்வாரா என்று தெரியவில்லை. இதுபோன்ற ஆணவக்கொலைகளை உடனடியாக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இந்த கொலையில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறதோ அவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
நந்தீஸ் ஆணவக்கொலைக்குப் பின்னால், மிகப்பெரிய சாதிவெறி இருப்பதாக கருதுகிறேன். இதுபோன்ற சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளக்கு தூக்குத்தண்டனை தந்தால்கூட தவறில்லை. இது தமிழ்சமுதாயத்திற்கு மிகப்பெரிய அவமானம். நந்தீஸ் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)