அந்த வகையில் தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி தி.மு.க. 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி புதுச்சேரியின் ஒரு மக்களவை தொகுதி உட்பட 10 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும், வி.சி.க. 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, கொ.ம.தே.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளும் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளன. அதே சமயம் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல் தொகுதியில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.