cpim shanmugam says case should be handed over to the CBI to find the real culprits 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் வேங்கைவயல். இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதன்படி மொத்தமாக இதுவரை 300க்கும் மேற்பட்ட நபர்களிடம் நேரடி சாட்சியங்களும், 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும், 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பரிசோதனைகளும், அறிவியல் பூர்வமான முறையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இத்தகைய சூழலில் தான் தமிழக அரசு இந்த சம்பவத்தில், முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முட்டுக்காடு ஊராட்சித் தலைவர் பத்மாவின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் முரளிராஜா வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு குரல் மாதிரி பரிசோதனை, டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய இரண்டு இளைஞர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த 3 பேரிடமும் ஆரம்பத்தில் இருந்தே சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அறிவியல் பூர்வமான சாட்சிகள் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இவர்களை சம்பந்தபட்ட நபர்களாக கருதியுள்ளனர்.

இந்நிலையில் வேங்கை வயல் பிரச்சனை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை.

Advertisment

இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்கு காரணம் என்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, இத்தகைய வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய இவ்வழக்கை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவிடம் (சிபிஐ) ஒப்படைக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.