ADVERTISEMENT

விவசாய மசோதாக்களை எதிர்த்து கோட்டை நோக்கிய பேரணி..! சி.பி.ஐ.எம். கட்சியினர் கைது (படங்கள்)

03:27 PM Sep 21, 2020 | george@nakkheeran.in

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாயிகள் மசோதாக்களை எதிர்த்து விவசாய சங்கத்தினர் சென்னை பாரி முனையில் போராட்டம் நடத்தினர்.

ADVERTISEMENT

கோட்டை நோக்கி பேரணியாக செல்லவிருந்த அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். எனவே, விவசாய சங்கத்தினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பாரிமுனை சந்திப்பில் நான்கு பக்கங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்கூட்டியே அறிவித்த போராட்டம் என்பதால் போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க சில நிமிடங்களில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களை அப்புறப்படுத்த போலீஸார் தொடர்ந்து முயற்சி செய்தனர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு மாநகர காவல் பேருந்தில் ஏற்றி செல்லப்பட்டனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு விவசாய சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய சங்கம் சார்பாக இன்று போராட்டம் நடைபெற்றது. விவசாய நலன்களுக்கு எதிரான மசோதாக்கள் நிறைவேற காரணமாக இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி மன்னிப்பு கேட்டு பதவி விலக வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை குறித்தோ, அரசு கொள்முதல் குறித்தோ எந்த அறிவிப்பும் இந்த மசோதாக்களில் இல்லை. அரசு கொள்முதல் செய்யும் போதே குறைந்தபட்ச ஆதார விலை கட்டுப்படியாகவில்லை. இச்சட்டம் விவசாயத்தை கார்ப்பரேட் கபளீகரம் செய்ய வழி வகுக்கும்” என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT