Skip to main content

மத்திய மாநில அரசுகள் பச்சை துரோகம் செய்கிறது... - பாலகிருஷ்ணன் 

Published on 24/12/2018 | Edited on 24/12/2018
cpim


 

கஜா புயலால் பாதிக்கப்பட்டு விவசாயம் மற்றும் தொழில் அனைத்தையும் இழந்து வாழ்வாதாரத்தை இழந்து வாடும்  புதுக்கோட்டை மாவட்ட மக்களை காக்க பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து அதற்கான இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கீரமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கவிவர்மன், மாநிலக்குழு சின்னத்துரை, நாகராஜன் மற்றும் மாவட்டக்குழு உடையப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீதர் அனைவரையும் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.


ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்திட வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு தென்னை மரத்துக்கு ரூ. 20 ஆயிரம், வாழை ஒரு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம், நெல்லுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் விவசாய கடன்களை தள்ளுபடி, கல்விக்கடன், சுயஉதவிக்குழு கடன் உள்ளிட்ட அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு கேட்ட ரூ. 15 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஓடு, கூரை வீடுகளை காங்கிரீட் வீடுகளாக மாற்றிக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 


இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம், கறம்பக்குடி, அறந்தாங்கி மற்றும் பல்வேறு ஒன்றியங்களில் இருந்தும் சுமார் ஆயிரம் சுயஉதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டு சுயஉதவிக்குழு கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர். மேலும் முதலமைச்சருக்கு மனு அனுப்பினார்கள். அந்த மனுவில்.. தனியார் நிதிநிறுவனங்களின் கட்டாய வசூலை நிறுத்தக் கோரியு முழக்கமிட்டனர். தொடர்ந்து அனைத்து பெண்களும் தங்கள் பகுதி கஜா புயலால் பாதிக்கப்பட்டு விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்ட நிலையில் தனியார் நிதிநிறுவனங்களில் பெற்ற கடன்களை வசூலிக்க கட்டாயப்படுத்தி வருவதுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் 6 மாத கால அவகாசம் கொடுத்த பிறகும் வசூலுக்கு வந்து அவமானப்படுத்தி பேசுகிறார்கள். ஆகவே அந்த கடன்களை தமிழக அரசு ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மூலம் முதலமைச்சருக்கு அனுப்பினார்கள்.


ஆர்ப்பாட்டத்தில் பாலகிருஷ்ணன் பேசியதாவது.. கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசுகள் பச்சை துரோகம் செய்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க முன்வரவில்லை. அதனால் தான் விவசாயிகள் ஏதாவது கிடைக்குமா என்று சாலைகளில் கையேந்தி நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் ரூ. 15 ஆயிரம் கோடி கேட்டு மனு கொடுத்தார் 40 ஆட்கள் ஆகிவிட்டது எந்த பதிலும் இல்லை. தமிழகத்தை பிரதமர் மோடி ஒதுக்கி பாhக்கிறார். புயல் பாதித்த மக்களை பார்க்க வராத பிரதமர் ஓட்டுக் கேட்க சென்னை வருகிறார். 


மொத்தமாக விவசாயம் பாதிக்கப்பட்டு விட்ட நிலையில் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் கொடுத்த தனியார் நிறுவனங்கள் நெருக்கடி கொடுப்பது என்பது வருத்தமளிக்கிறது. அதனால் தான் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய சொல்கிறோம். பசுமை வழிச்சாலைக்கு ஒரு தென்னை மரத்துக்கு ரூ. 50 ஆயிரம் கொடுக்க முன்வந்த அரசுக்கு இங்கே கஜாவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ. 1100 என்பது எந்த வகையில் ஏற்புடையது. வுpவசாயிகளை பிரித்து பார்க்கிறார்கள். நிவாரணம் கொடுப்பதாக குறைந்த நபர்களுக்கு கொடுப்பதால் மக்கள் சாலை மறியல் போன்ற போராட்டத்திற்கு போகிறார்கள். போராடும் மக்கள் மீது வழக்கு போட்டு போராட்டங்களை முடக்க முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது. போராடும் மக்கள் மீது வருவாய் துறையை வைத்து புகார் கொடுக்க மிரட்டுவதும் கொடுக்கவில்லை என்றால் இடமாறுதல் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள். எத்தனை வழக்குகள் போட்டாலும் போராட்டங்களை முடக்க முடியாது. நெடுவாசல் போல எழுந்து வருவார்கள் மக்கள். சீப்பை ஒழித்தால் கல்யாணம் நின்று விடாது. அது போல எத்தனை வழக்கு போட்டாலும் போராட்டங்கள் நடக்கும்.


ஒரு மாவட்டத்தில் உள்ள அமைச்சர் அந்த மாவட்ட மக்களுக்கு செய்யும் நலப்பணிகளைப் பார்த்து மக்கள் பாராட்ட வேண்டும். முழு நிவாரணம் பெற்றுக் கொடுத்தேன் என்று பெருமையாக சொன்னால் அதை மக்கள் பாராட்டுவார்கள். ஊடகங்களும் பாராட்டி எழுதும். ஆனால் அதை செய்யாமல் அமைச்சர் வீட்டில் ரைடுää உதவியாளருக்கு சம்மன்ää 7 மணி நேரம் விசாரணை என்று செய்திகள் வந்தால் அந்த அமைச்சரை எப்படி மக்கள் பாராட்டுவார்கள். கேரளாவில் புயல் பாதிக்கப்பட்ட போது இழப்பீடுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டது. ஒரு வாரத்தில் முழுமையாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் இங்கே 40 நாட்கள் ஆகியும் மின் இணைப்பு கிடைக்கவில்லை. தமிழக அரசும் மத்திய அரசும் புதுக்கோட்டை போன்ற புயலால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களையும் பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து மக்களுக்கு வேண்டியதை செய்ய வேண்டும் என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.