Advertisment

“இயற்கை நீதிக்கு முற்றிலும் விரோதமானது” - பெ. சண்முகம் கடும் கண்டனம்!

cpim P Shanmugam strongly condemns Completely contrary to natural justice

சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ள்ளது. அதோடு இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் கடந்த ஆண்டு பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை தொழிலாளர்கள் பெற்றனர். இந்நிலையில் கடந்த மாதம் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் சிஐடியு தொழிற்சங்கம் அமைப்பதற்கு போராட்டம் நடத்திய சங்கத்தின் 3 தலைமை தொழிலாளர்களை ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சாம்சங் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இதனைக் கண்டித்தும், சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத பழிவாங்கல் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும் 2025 பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 1300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

Advertisment

இந்த போராட்டத்திற்கு சுமூகத் தீர்வு காண்பதற்கு தொழிலாளர் நலத்துறை முன்னிலையில் 10 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படாமலேயே தொடர்கிறது. தொழிலாளர்கள் சங்கம் வைத்த ஒரே காரணத்திற்காக அவர்களின் தொழிற்சங்கத்தை ஏற்க மறுப்பதும், அதை முற்றிலுமாக அழிக்க முனையும் தீய நோக்கத்தோடு சாம்சங் நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டு வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தொழிற்சாலையின் தலைமை நிர்வாக மேலாளருக்கு எடுத்துரைப்பதற்காக சென்ற சங்கத்தின் தலைமை நிர்வாகிகள் மூன்று பேரை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.

Advertisment

இந்த பழிவாங்கல் நடவடிக்கைகையை கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர நிர்வாகமும், தொழிலாளர் துறையும் தெரிவித்த ஆலோசனையை தொழிற்சங்கம் ஏற்று அமலாக்க முன்வந்த போது நிர்வாகம் 1600க்கும் மேற்பட்ட வெளி ஆட்களை வைத்து சட்டவிரோத உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டு நிரந்தர தொழிலாளர்களை ஆலையை விட்டு வெளியேற்ற முயற்சித்தது. இதுகுறித்து உரிய முறையில் தகுந்த ஆதாரங்களுடன் மூன்று முறை புகார் அளித்தும் தொழிற்சாலைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சாம்சங் நிர்வாகத்திற்கே ஆதரவாக செயல்பட்டது. இந்த பின்னணியில் சாம்சங் தொழிலாளர்கள் வெளி ஆட்களை அப்புறப்படுத்த வலியுறுத்திய போது மேலும் 20 தொழிற்சங்க நிர்வாகிகளை நிர்வாகம் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நேரிடையாக பணியிடை நீக்கம் செய்தது.

அனைத்து தொழிலாளர்களையும் வேலைக்கு எடுத்துக் கொள்ளவும், இப்பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணவும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், சாம்சங் நிர்வாகம், தொழிற்சங்க நிர்வாகிகள் முன்பு நடந்த சமரசப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல சம்மதித்த நேரத்தில் சாம்சங் நிர்வாகம் சங்கத்தை நிர்மூலமாக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு தொழிலாளியும் மன்னிப்பு கடிதம் எழுதி தர வேண்டுமென்றும், நடந்தவற்றிற்கு ஒவ்வொரு தொழிலாளியும் தன்னுடைய தனி குற்றமாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் கடிதம் எழுதிக் கொடுத்த பின்னரே ஆலைக்குள் விடுவோம் என்று நிபந்தனை விதித்ததுடன், தண்டணையாக 8 நாள் சம்பளமும் பிடித்தம் செய்துள்ளது. இவையனைத்தும் தொழிற்சாலை சட்டத்திற்கும், இந்திய தொழில் தகராறு சட்டத்திற்கும், இயற்கை நீதிக்கும் முற்றிலும் விரோதமானது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

cpim P Shanmugam strongly condemns Completely contrary to natural justice

இந்தியாவில் செயல்படும் சாம்சங் நிர்வாகம் இந்திய நாட்டின் தொழிற்சாலை சட்டங்களையும், தொழிற்சங்க சட்டங்களையும் மதித்து செயல்படுவதற்கு தமிழக அரசு உரிய முறையில் சாம்சங் நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. எனவே, பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக வேலை வழங்கிட வேண்டுமெனவும், சாம்சங் நிர்வாகத்தின் பழிவாங்கல் நடவடிக்கையை முற்றிலும் கைவிடவும், இப்பிரச்சனையில் தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறையும் உடனடியாக தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

labours samsung
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe