Advertisment

“தாக்குதலில் ஈடுபட்ட அனைவர் மீதும்  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” - பெ. சண்முகம் வலியுறுத்தல்!

cpim P Shanmugam insists Action must be taken against everyone Srivaikundam student issue

ஸ்ரீவைகுண்டம் தலித் மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ள்ளது. அதோடு இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள அரியநாயகிபுரத்தைச் சார்ந்த 17 வயது மாணவர் தேவேந்திரராஜ் கொடூரமான முறையில் வெட்டப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு இந்த கொடூரச் செயலை வன்மையாக கண்டிக்கிறது.

Advertisment

தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கல்வி நிலையங்களுக்குள் சாதிய சக்திகளின் ஊடுருவல்களும், பள்ளி மாணவர்கள் மத்தியில் சாதிய வன்கொடுமை தாக்குதல்களும் நிகழ்வது அபாயகரமானதாகும். தாக்குதலுக்கு ஆளான தேவேந்திரராஜ் பதினோராம் வகுப்பு படித்து வருபவர். பள்ளிக்கு பேருந்தில் செல்லும் வழியில் தாக்கப்பட்டு இருக்கிறார். இரண்டு கைகளிலும் விரல்கள் வெட்டுப்பட்டுள்ளன. தலையிலும், முதுகிலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார். கட்டாரிமங்கலம் என்ற ஊரில் நடைபெற்ற கபடி போட்டியில், கெட்டியம்மாள்புரம் அணியை தோற்கடித்து அரியநாயகிபுரம் அணி வெற்றி பெற்றதே இந்த கொலைவெறி தாக்குதலின் பின்புலம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

வெற்றி பெற்ற அரியநாயகிபுரத்தின் கபடி வீரர்கள் அனைவரும் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதையும், இயல்பாகவே அரியநாயகிபுரம் அணியினர் வெற்றியை கொண்டாடியதையும் தோற்றுப் போன அணியினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பள்ளி மாணவர்கள் மத்தியில் சாதிய சிந்தனைகள் எந்த அளவிற்கு புரையோடிப் போயிருக்கிறது என்பதை இந்த கொடூரமான வன்முறை வெளிப்படுத்துகிறது. இத்தகைய கொடூரங்கள் தொடர் நிகழ்வுகளாக மாறி வருவதை அக்கறையோடும் கவலையோடும் சமூகம் அணுக வேண்டியிருக்கிறது. பள்ளி மாணவர் சின்னத்துரை தாக்கப்பட்டதையொட்டி நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு பரிந்துரைகளும் பெறப்பட்டன.

அதன்மீது தொடர் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். தேவேந்திரராஜ் மீது தாக்குதலில் ஈடுபட்ட அனைவர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைந்து நீதி கிட்டுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இத்தகைய சாதிய வெறியூட்டலுக்கு பின்புலமாக இருக்கிற சாதி ஆதிக்க சக்திகள் கண்டறியப்படுவதும், தனிமைப்படுத்தப்படுவதும், உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதும் அவசரமான தேவை என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசு அதற்குரிய வகையில் காவல்துறை, உளவுத்துறை செயல்பாடுகளையும் பரிசீலித்து சாதிய பாகுபாடு இல்லாமல் செயல்படுவதையும், இத்தகைய கொடுமைகள் நடைபெறாமல் தடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Tuticorin srivaikundam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe