Skip to main content

8 வழிச்சாலை... நம் கனிம வளங்களை அள்ளிச் செல்லும் ஜிண்டால் முதலாளிக்கானது..  எடப்பாடி அரசுக்கு பாலபாரதி எச்சரிக்கை..

போராடும் மக்களை கொன்றுகுவிக்கும் ஏதேச்சை அதிகாரத்தை கைவிடாவிட்டால் உங்களை நாங்கள் சும்மா விடமாட்டோம் என எடப்பாடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி.

 

balabarathi


 

‘போராடுவோம் தமிழகமே’ என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமையன்று நடைபெற்ற பிரச்சாரத்தில் அவர் பேசியது,

மத்தியில் ஆளும் மோடி அரசும், அதன் ஊதுகுழலாகச் செயல்படும் மாநில எடப்பாடி அரசும் மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. அவர்கள் ஏதாவது ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால்.. கார்பரேட் நிறுவனங்களுக்கு சேவகம் செய்யும் திட்டமாகவே இருக்கும். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட அனைத்தும் ஏழை, எளிய மக்களை காவு வாங்கி பெரு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் திட்டமாகவே இருக்கிறது.

அந்த வகையில் தற்பொழுது சேலத்திலிருந்து சென்னை வரை 8 வழிச்சாலை அமைத்தே தீருவேன் என எடப்பாடியார் அடம்பிடிக்கிறார். சாதாரண மக்களின் போக்குவரத்து வசதிக்காகவா இதைச் செய்கிறார்? சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து இரும்பையும், பிளாட்டினத்தையும் எடுத்து ஜிண்டால் உள்ளிட்ட கார்பரேட் கம்பெனிக்கு தாரைவார்க்கத் துடிக்கிறார்கள். அவர்கள் இலகுவாக சென்னை துறைமுகத்திற்கு கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்கே இந்த எட்டுவழிச்சாலை. இதற்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலைங்களையும், மக்களின் வாழ்விடங்களையும், மலைகளையும் அழிக்கத் துடிக்கிறார்கள். ஏற்கனவே, சேலத்திற்கு விமானச் சேவை அளிக்கப்பட்டதும் ஜின்டால் முதலாளி வந்து இறங்குவதற்குத்தானெ ஒழிய மக்களுக்கானது அல்ல.

 

balabarathi


 

 

 

போராடுகின்ற மக்கள் எல்லாம் சமூக விரோதிகள் என்கிறார்கள். யார் சமூக விரோதி? மணலைக் கடத்துபவன், மலைகளை வெட்டியெடுப்பவன், இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவன், பொது வினியோகத் திட்டத்தை சீரழிப்பவன், அரசாங்க சொத்தை கொள்ளையடிப்பவன், மக்கள் வரிப்பணத்தை சுரண்டுபவன் இவர்கள் தானே உண்மையான சமூக விரோதி. மதுக்கடைகளுக்கு எதிராக, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய ‘மக்கள் அதிகாரத்தை’  சேர்ந்த 6 பேர் மீது தேச விரோத வழங்கு போட்டுள்ள எடப்பாடி அரசுதான் சமூக விரோத அரசு.

 

 

கையில் கொடிகூட கொண்டு போகாமல் குழந்தைகள், பெண்களுடன் அமைதியாக பேரணி சென்ற தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வெகுதூரத்திலிருந்து அதிநவீன துப்பாக்கியுடன் குறிப்பிட்ட நபர்களை குறிபார்த்து சுடப்பட்டுள்ளனர். ஒருவர்கூட முழங்காலுக்கு கீழே சுடப்படவில்லை. நெஞ்சிலும், தலையிலும், வாயிலுமாக சுடப்பட்டுள்ளனர். எடப்பாடி அரசு ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவால் விடுத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் எதேச்சையதிகாரத்தை கைவிடாவிட்டால் உங்களை நாங்கள் சும்மா விடாமாட்டோம். போராடும் மக்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்போம். மத்தியில் பிஜேபி அரசையும், மாநிலத்தில் அதிமுக அரசையும் வீழ்த்துவதற்கு விரிவான களம் அமைப்போம். என்றார் பாலபாரதி..