/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/59_69.jpg)
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை அரசியல் கருவியாக தரம் தாழ்ந்துவிட்டதை வெளிப்படுத்தியுள்ள உச்சநீதிமன்றத்தின் கருத்துகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனை நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அப்போதைய பா.ஜ.க. தலைவர் அறிவித்தார். சோதனை நடவடிக்கை முடிந்த பிறகு, அவர் ஊட்டிய செய்தியை, அமலாக்கத்துறை அப்படியே வாந்தி எடுத்தது.
இந்தச் சோதனை நடவடிக்கையில் அமலாக்கத்துறை அத்துமீறி நடந்து கொண்டது குறித்து, டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இதன் விசாரணையின்போது, அமலாக்கத்துறை நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியது. இந்த நிலையில் டாஸ்மாக் வழக்கில் விசாரணையை தொடரலாம் என உயர்நீதிமன்றம் அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை கடந்த சில நாட்களாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் தொடங்கி பெண் அலுவலர்கள் உட்பட உயர் அலுவலர்கள் அனைவரையும் விசாரணைக்கு அழைத்து, மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் அணுகி அரசு அலுவலர்கள் அமலாக்கத்துறையால் துன்புறுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என முறையிட்டுள்ளது. இந்த முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ஏ.ஜி. மாசிஹ் அமர்வு, அமலாக்கத்துறையின் செயல், எல்லா வகையிலும் எல்லை தாண்டி சென்றுள்ளது. அது கூட்டாட்சி கட்டமைப்பை சிதைக்கும் செயலாகும் என கடுமையாக எச்சரித்துள்ளது.
மூல வழக்கு குறித்த தெளிவில்லாமல் அமலாக்கத்துறை எந்த வழக்கின்மீது விசாரணை நடத்துகிறது. தனி நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதை தவிர்த்து, நிறுவனத்தின் மீது நடவடிக்கை என்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது போன்ற அடுக்கடுக்கான வினாக்களை எழுப்பி, அமலாக்கத்துறை அரசியல் கருவியாக தரம் தாழ்ந்துவிட்டதை வெளிப்படுத்தியுள்ள உச்சநீதிமன்றத்தின் கருத்துகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)