Advertisment

‘தண்டனை குறைப்பின்றி 30 ஆண்டுகள் சிறை’ - நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இந்திய கம்யூ. வரவேற்பு

CPI  welcomes court's verdict sentencing Gnanasekaran to 30 years in prison

Advertisment

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் குற்றவாளி ஞனசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 90 ஆயிரம் அபதாரமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது என மாநிலச் செயலாளர் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த மாணவி, கடந்த 2024 டிசம்பர் 23 ஆம் தேதி மாலையில் அவரது சக மாணவருடன் பேசிக் கொண்டிருந்த போது, மர்ம நபரால் கடத்தி, பாலியல் வன் தாக்குதலுக்குள்ளானார். பாதிக்கப்பட்ட மாணவி அருகில் உள்ள கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24 ஆம் தேதி புகார் செய்தார். புகார் மீது காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து டிசம்பர் 25 ஆம் தேதி குற்றவாளி குணசேகரன் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தை பாஜக, அஇஅதிமுக உள்ளிட்ட சில அமைப்புகள் அரசியலாக்கி ஆதாயம் தேடும் செயலில் ஈடுபட்டன. வழக்கை மத்திய புலானய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். உயர் நீதிமன்றம் மூன்று பெண் இந்திய காவல் பணி அதிகாரிகள் கொண்ட விசாரணைக் குழு அமைத்தது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ரூபாய் 25 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்து, சிபிஐ விசாரணை கோரிக்கையை தள்ளுபடி செய்தது. மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு ஜனவரி 2 ஆம் தேதி பல்கலைக் கழக வளாகம் சென்று விசாரணையை தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 24 ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதி மன்றம் ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் தினசரி விசாரணை நடத்தி, ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட குணசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபணம் செய்யப்பட்டு, அவரை குற்றவாளி என நீதிமன்றம் 28.05.2025 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

Advertisment

இந்த பாலியல் வன் தாக்குதல் தொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து, நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் உறுதி செய்து, குற்றங்களை நிரூபணம் செய்த காவல்துறையின் நடவடிக்கை சிறப்பானது. குறிப்பாக சிறப்பு புலானாய்வு குழுவின் பெண் அதிகாரிகள் விரைந்த விசாரணை பாராட்டத்தக்கது. பாதிக்கப்படும் பெண்கள் சட்ட ரீதியாக அதனை எதிர் கொள்ளும் துணிவுக்கு வழி வகுத்துள்ளது அதன் தொடர்ச்சியாக இன்று (02.06.2025) குற்றவாளி ஞனசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 90 ஆயிரம் அபதாரமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Anna University
இதையும் படியுங்கள்
Subscribe