Skip to main content

’37 எம்.பி.க்களும் மக்கள் போராளிகள்’-திருப்பூர் கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன்

Published on 01/06/2019 | Edited on 01/06/2019

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற திருப்பூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி. சுப்பராயன்  ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

s

 

அப்போது அவர் பேசுகையில்,   ‘’பாராளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில்  என்னை வெற்றி பெற வைத்த பொதுமக்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த தேர்தலில் திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி தோல்வி அடையும் என கருத்துக் கணிப்புகளை சில ஊடகங்கள்  வெளியிட்டன.  அதை  பொய்யாக்கும் வகையில் மக்கள்  93 ஆயிரத்து 368 வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர்.  மக்கள் எதிர்பார்ப்பு படி அவர்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன்.

 

  தமிழக அரசு கமிஷன் வாங்குவதை தொடர்ந்து வாடிக்கையாக கொண்டுள்ளது.  இது  மறுக்க முடியாத உண்மை.  ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி பொதுவாழ்வில் கமிஷன் என்பதே கிடையாது.  அதன் வழியில் நானும் எனது தொகுதியில் வழங்கப்படும் தொகையை முழுமையாக மக்கள் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு வழங்குவேன்.  எனக்கு எதிராக நான் தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்று வேலை செய்தவர்களுக்கும் எனது தொகுதி மக்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கும் பணியாற்ற நான் கடமைப்பட்டு உள்ளேன் எனவே யாராக இருந்தாலும் அவர்கள் கோரிக்கையை என்னிடம் தெரிவிக்கலாம். 

 

இந்தியாவில் எந்த ஆட்சி வரக்கூடாது என்று நினைத்தோமோ அந்த ஆட்சி மீண்டும் வந்துள்ளது.  இந்த ஆட்சி தேச விரோதமாக செயல்படுகிறது.  தேச விரோதம் என்பது தேசிய நலனை புறக்கணிப்பது என்பதாகும்.  நாட்டின் சொத்துக்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது இந்தியாவின் சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஜிஎஸ்டி, பண மதிப்பு இழப்பு போன்ற நடவடிக்கைகள் பா.ஜ.க.மோடி அரசு செய்தது. 

 

மேலும் விவசாய உற்பத்தி துறை வளர்ச்சி பெரும் சரிவை சந்தித்துள்ளது.  வேலையில்லாத் திண்டாட்டமும் பூதாகரமாக வெடித்துள்ளது.  மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் நிலை திவாலாகி விட்டது.  விவசாயிகளுக்கு எதிரான 8 வழி சாலை திட்டம் நிறைவேற்ற உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது.  ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் நெல் களஞ்சியமாக உள்ள டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும்.  பாஜக கடந்த கால ஆட்சியில் அறிவித்த எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.  சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஆதால பாதாளத்திற்கு சென்றுவிட்டது.  மக்களுக்கு திட்டங்கள்,அத்திவாசிய பணிகள் உடனுக்குடன்  நடைபெற வேண்டும் என்றால்  உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

 

திமுக கூட்டணி தலைமையில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றுள்ள  37 எம்.பி.க்களும் மக்கள் போராளிகள். நாங்கள் ஒன்று சேர்ந்து தமிழக மக்களின் நலனுக்காக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியே மக்கள் மன்றத்திலும் போராடுவோம்.   திருப்பூரில் ஜவுளித்தொழிலில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது இதனைப் போக்க  தொழிற்சாலைகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மூன்றில் இரண்டு பங்கு மானியத்தை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும்." என திருப்பூர் சுப்பராயன் கூறினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Next Story

“இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும்” - பாஜகவை விளாசிய து.ராஜா

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cpi National Secretary D. Raja has severely criticized the BJP

தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வருவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த து.ராஜா, “அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது மாறி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பாஜக நாசகார செயலில் ஈடுபட்டு வருவதால் இந்தியா ஒரு ஜனநாயக குடியரசாக நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக, மக்கள் நலன் காத்திட, மாநில உரிமைகளை மதித்து செயல்படுகிற ஒன்றிய அரசாக இந்தியா தொடர்ந்து நீடிக்குமா? என்ற கேள்வியும் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் இந்தத் தேர்தலை எல்லோருமே முக்கியமான தேர்தலாக கருதுகிறோம்.

பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். மதவெறி பாசிசத்தை இந்தியாவில் நிலை நிறுத்த வேண்டும் எனவும், மதச்சார்பற்ற நாடு என்ற நிலையை மாற்றி மதவாத நாடாக்க முயன்று வருகிறது.  சட்ட நெறிகளை எல்லாம் அழித்து ஒழித்து விட்டு ஏற்றத்தாழ்வுகளை அப்படியே கட்டி காப்பாற்ற வேண்டும். ஆர்எஸ்எஸ் அஜண்டாவை நிறைவேற்றுகிற ஒரு கட்சியாக தான் பாஜக செயல்படுகிறது. இதற்கு பிரதமராக மோடி செயல்படுகிறார்

மோடி தமிழ்நாட்டுக்கு தற்போது அடிக்கடி வருகிறார். அவர் பிரதமர் என்ற முறையில் தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளைப் பெற வருவதற்கு வெட்கப்பட வேண்டும்.  தமிழ்நாடு பல பேரிடர்களை சந்தித்தபோதெல்லாம் மோடி வரவில்லை. தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லை, நிவாரண நிதி கூட கொடுக்கவில்லை.

இந்தியாவில் முன்பிருந்ததை  விட அந்நிய கடன் அதிகரித்துள்ளது. இது பற்றி மோடி பொது வெளியில் விவாதிக்க தயாரா?  மோடி ஆட்சியில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மக்களுக்கு  வளர்ச்சி இல்லை.  மோடியின் அரசு மக்கள் விரோத அரசாக நாட்டு நலனில் அக்கறை இல்லாத ஒரு அரசாக, பெரு முதலாளிகளின் எடுபிடி அரசாக மாறிவிட்டது.  மதச்சார்பின்மையை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணியில் இருக்கிற கட்சிகள் தொடர்ந்து போராடுகிறோம். இந்தத் தேர்தல் களத்தில் மக்களிடம் வாக்கு கேட்கின்றோம்.

பாட்டாளி மக்கள் கட்சி பாஜகவோடு  அணி சேர்ந்து இருப்பது பெரிய துரோகம். பாட்டாளிகள் என்று சொல்லிக்கொண்டு பாஜகவோடு சேர்வது எவ்வளவு பெரிய கொள்கை மோசடி, துரோகம் என்பதை இன்றைக்கு மக்கள் கேட்கிறார்கள்.  அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கிற அதிமுக தமிழர்களின் உரிமைகளை மீட்போம் என்கிறார்கள். தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? மோடியை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும் என்று எடப்பாடி பேசுவாரா?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை காத்திட, பாசிசத்தை வீழ்த்திட  ஸ்டாலின் அழைக்கிறேன் என்று குரல் கொடுத்து இருக்கிறார். அது அவருடைய குரல் மட்டுமல்ல,  தமிழ்நாடும் இந்தியாவும் ஒன்று பட்டு முன்னேற வேண்டும் என்று விரும்புகிற எல்லோரும் எழுப்புகிற குரல்.  இந்தியாவைக் காத்திட பாசிசத்தை வீழ்த்திட நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.  ஒன்றுபட்டு போராட வேண்டும். இந்தப் பின்னணியில் தான் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும், ஜாதியை உடைத்து தகர்த்தெறிய வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று  போராடுகிற முன் களப்போராளியாக தொல்.திருமாவளவன் இருக்கிறார். எனவே அவருக்கு சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் வாக்களிக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு மணிவாசகம், மாநில நிர்வாகக் குழு மருத்துவர் ரவீந்திரநாத், மாநிலக்குழு மருத்துவர் சாந்தி, மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் வி.எம் சேகர், வட்டச் செயலாளர் தமீம் முன் அன்சாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.