Advertisment

ரேபிட் டெஸ்ட் கிட் விவகாரம்: அரசுக்கு கம்யூனிஸ்ட் முத்தரசன் கண்டனம்!

  CPI state secretary R Mutharasan statement about rapid test kit issue

சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் விரைவுப் பரிசோதனை கருவி ஒன்று ரூபாய் 400 க்கு வாங்கியதை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ரூபாய் 600 கொடுத்து கொள்முதல் செய்ய யார் அழுத்தம் கொடுத்தது? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "புதுவகை கரோனா வைரஸ் பெருந்தொற்றுபரவலில் நாடு பதறிப்போய் நிற்கிறது. இந்த உயிர்க்கொல்லி நோயை தடுக்கவோ, முறித்து அழிக்கவோ இதுவரை மருந்து கண்டு பிடிக்காத நிலையில் கோவிட் 19 வைரஸ் தொற்றுக் கண்டறியும் பரிசோதனை மட்டுமே ஒரே நம்பிக்கையாக இருக்கிறது.

Advertisment

கோவிட் 19 வைரஸ் தொற்று குறித்த பரிசோதனை பெருமளவில் நடத்தப்பட வேண்டும் என அனைவராலும் ஒருமித்த குரலில் வலியுறுத்தப்பட்டது. இதனையொட்டி சீனாவில் இருந்து விரைவுப் பரிசோதனை கருவிகள் ஒரு லட்சம் வாங்க ஆர்டர் கொடுத்து விட்டோம். ஓரிரு நாளில் வரும் என தமிழ்நாடு அரசு ஒரு வாரம் திரும்ப, திரும்ப அறிவித்தது . பின்னர் மத்திய அரசு வழிமறித்து எடுத்துக் கொண்டது எனத் தெரிவித்தனர்.இதோ, அதோ என விரைவுப் பரிசோதனை கருவிகள் வந்து சேர்ந்தன. ஆனால் அதன் பரிசோதனை முடிவுகளை நம்ப முடியாது, நம்பகத்தன்மை இல்லாத விரைவு பரிசோதனை கருவிகளில் பரிசோதனை செய்வதை உடனடியாக நிறுத்துங்கள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக் கொண்டது.

இதன்படி விரைவு பரிசோதனை கருவிகள் பயனற்ற குப்பைகளாகி விட்டன. அவைகள் அனைத்தையும் திருப்பி அனுப்பி விடுவோம் என்று அறிவித்தனர். இந்த நிலையில் விரைவுப் பரிசோதனை கருவிகள் கொள்முதல் செய்ததில் பெரும் ஊழல் நடந்திருப்பதை டெல்லி உயர் நீதிமன்ற விசாரணை அம்பலப்படுத்தி இருக்கிறது.

விரைவுப் பரிசோதனை கருவி ஒன்று ரூபாய் 225 என்று சீன நிறுவனங்கள் விற்பனை செய்வதை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இடைத்தரகர்கள் அமர்த்தி ரூபாய் 600 க்கு கொள்முதல் செய்து பெரும் தொகை பார்த்துள்ளது. சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் விரைவுப் பரிசோதனை கருவி ஒன்று ரூபாய் 400 க்கு வாங்கியதை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ரூபாய் 600 கொடுத்து கொள்முதல் செய்ய யார் அழுத்தம் கொடுத்தது?

பொது மக்கள் உயிரோடு விளையாடிய ஊழலில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பது போன்ற விபரங்களும் விசாரணையில் வெளிவர வேண்டும், இதில் தொடர்புள்ள ‘நபர்கள்’ யாராக இருந்தாலும் மன்னிக்க முடியாத குற்றம் புரிந்தவர்கள் என்ற முறையில் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

விரைவுப் பரிசோதனை கருவிகள் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விபரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ஒரு அறிக்கையில் கேட்டுக் கொண்டதற்கு தமிழ்நாடு அரசு இதுவரை வாய் திறந்து பதில் அளிக்கவில்லை.

“எரியும் வீட்டில், பிடுங்கியது லாபம்“ என்ற சுயநல ஆதாயம் தேடும் இந்த ஈனச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்வாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல், விரைந்து விசாரித்து தண்டிக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது." என குறிப்பிட்டுள்ளார்.

rapid test kit covid 19 corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe