CPI and CPM erode support farmers

Advertisment

மத்திய பா.ஜ.கஅரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, தொடர்ந்து நாடு முழுக்க விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாகப் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் நாடு முழுவதும் இருந்து லட்சக் கணக்கான விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்று (04.12.2020)9 -ஆவது நாளாக நீடித்து வருகிறது.

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.கமற்றும் கூட்டணிக் கட்சி சார்பில், 5 -ஆம் தேதி கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று4 -ஆம் தேதி, தமிழகம் முழுவதும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமைத் தபால் நிலையம் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் பத்ரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில், வேளாண் மசோதா சட்டங்களைத்திரும்பப் பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர், அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டவுன் டி.எஸ்.பிராஜூ தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பிறகு மாலையில் விடுவித்தனர்.