கொட்டும் மழையில் களைகட்டிய மாட்டுச் சந்தை!

Cows purchased from Erode for the Government's Free Cow Scheme .

ஈரோடு கருங்கல்பாளையத்தில், வாரந்தோறும் புதன் இரவு தொடங்கி வியாழன் வரை, மாட்டுச்சந்தை நடைபெறும். இந்தச் சந்தையில் விற்பனைக்கு வருகிற மாடுகளை, ஈரோடு மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் நேரில் வந்து வாங்கிச் செல்வார்கள்.

இன்று, 31ஆம் தேதி கூடிய சந்தையில், ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்தது. இதில், தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ராமநாதபுரம், தேனி ஓமலூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஏராளமானவர்கள்,கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு வந்து மாடுகளை வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து மாட்டுச் சந்தை நடத்துபவர்கள் கூறும்போது, “இந்த வாரம் கூடிய சந்தையில் பசு-650, எருமை-250, கன்று-100 என 1,000 மாடுகள் வந்தது. இதில், பசுமாடு ரூபாய் 30 ஆயிரம் முதல் ரூபாய் 70 ஆயிரம் வரையும், எருமை மாடு ரூபாய் 30 ஆயிரம் முதல் ரூபாய் 45 ஆயிரம் வரையும், கன்று 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டன. தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தின் கீழ், ராமநாதபுரம், தேனி ஓமலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்குக் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் மாடுகளை வாங்கிக் கொடுத்தனர். இதன் காரணமாக, இந்த வாரம் சந்தைக்கு வரத்தான மாடுகள் 90 சதவீதம் விற்பனையானது” என்றனர்.

இன்று காலை முதல் மழை பெய்துகொண்டே இருந்தாலும் மாட்டுச் சந்தையில் மாடு விற்பனை களைகட்டியது.

Erode
இதையும் படியுங்கள்
Subscribe