
கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அயோத்தி ரவி என்கிற ரவிச்சந்திரன் (வயது 45). இவர் இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். கடந்த 23 ஆம் தேதி தனது மகள் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது தனது நண்பர் தீபக் என்பவரிடம் தான் வைத்திருந்த துப்பாக்கி ஒன்றைக் காட்டி எவ்வாறு சுடுவது என்று கூறும்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்த ஒரு குண்டு தீபக்கின் இடது கால் தொடையில் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த தீபக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சைக்கு தீபக் சேரும்போது மருத்துவர்களிடம், "காட்டு பன்றி வேட்டையின் போது தவறுதலாக நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்துவிட்டது" என அயோத்தி ரவி தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அயோத்தி ரவி வீட்டில், போலீசார் நடத்திய சோதனையில் இரு துப்பாக்கி 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து அயோத்தி ரவி கைது செய்யப்பட்டு அவர் மீது ஆயுதத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. பிறகு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், "கடந்த 2018 ஆம் ஆண்டு செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரிடம் இருந்து ஒரு துப்பாக்கியும், சென்னையைச் சேர்ந்த பாட்டில் பாஸ்கர் என்பவரிடம் மற்றொரு துப்பாக்கியும் 90 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதாக" தெரிவித்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட துப்பாக்கியை பயன்படுத்தி வந்துள்ளார். 15க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. மேலும் போதைப் பொருட்கள் கடத்தல் விற்பனையில் இவருக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.