Courtalam hostel... Police investigation!

தென்காசி மாவட்டத்தின் அருவிகளின் நகரமான குற்றாலத்தில் அண்ணாசிலை அருகேயுள்ள தனியார்தங்கும் விடுதிஒன்றில் கடந்த 30 தேதியன்று இரண்டு பெண்கள் ஒரு ஆண் உள்ளிட்ட குடும்பத்தினர் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர்.

Advertisment

குற்றாலப் பகுதிகளில் அருவிகளில் குளித்ததோடு பல இடங்களுக்குச் சென்று பார்த்துவிட்டு வந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றுள்ளனர். நேற்று காலையில் அறையிலிருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகப்பட்ட விடுதி பணியாளர்கள் கதவைத் தட்டி எழுப்பியுள்ளனர். ஆனால் கதவு திறந்தே கிடந்திருக்கிறது. உள்ளே சென்று பார்த்ததில் மூவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

Advertisment

தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த குற்றாலம் இன்ஸ்பெக்டர் ஜோசப் தலைமையிலான போலீசார் பார்வையிட்ட போது, இதில் 57 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் சுமார் 30 வயதுடைய பெண் இருவரும் இறந்து கிடந்தனர். 52 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மட்டுமே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு விரைவாக அனுப்பிவைத்தனர்.

தங்கும் விடுதியில்அவர்கள் கொடுத்த பதிவின் தகவல்படி போலீசார் நடத்திய விசாரணையில் மூவரும் மதுரை திருநகரைச் சேர்ந்த பாண்டியன் மகன் மகாலிங்கம் (57) அவரது மனைவி காமாட்சி (52) மகள் தனபிரியா (30) என்று தெரிய வந்தது. குளிர்பானத்தில் விஷம் கலந்து மூவரும் குடித்தது தெரிந்தது. சம்பவ இடத்தில் தடயவியல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இவர்கள் என்ன காரணத்திற்காக விஷம் குடித்தனர் என்பது குறித்து குற்றாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்கொலை முடிவுக்கு காரணம் கடன் தொல்லையா, அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து அவர்களின் உறவினர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷமருந்தி அதில் இருவர் பலியான சம்பவம் அருவிகளின் நகரில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.