ADVERTISEMENT

3 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்து அதிரடி காட்டிய நீதிமன்றம்!

06:42 PM Jul 05, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி. மலைக் கிராமம், புழுதேரி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மலையாண்டி என்பவரது மனைவி பழனியம்மாள். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மணப்பாறைக்குச் சென்றபோது, அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது சம்பந்தமான வழக்கு குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முக கனி, இறந்த பழனியம்மாளின் குடும்பத்திற்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 9,73,317 இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.

இதே போன்று, குளித்தலை அருகே உள்ள மருதூர் கிராமம் குடிதெருவைச் சேர்ந்த, ரத்தினவேல் மகன் விவேக் கடந்த 2017ல் திருச்சி வேங்கூர் செல்லும்போது விபத்தில் பலியானார். இது தொடர்பான வழக்கு குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முக கனி, இறந்து போன விவேக் குடும்பத்திற்கு, இழப்பீட்டு தொகையாக வட்டியுடன் சேர்த்து, ரூ. 16,16,108ஐ வழங்கவும் தீர்ப்பளித்தார். மற்றொரு வழக்கில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கடவூர் பகுதி குன்னுடையான்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது தந்தை தங்கவேல் கடந்த 2010 ஆம் ஆண்டு மணப்பாறை செல்லும்போது அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார்.

இது சம்பந்தமான வழக்கு குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முக கனி, இறந்து போன தங்கவேல் குடும்பத்தாருக்கு இழப்பீட்டுத் தொகையாக வட்டியுடன் சேர்த்து ரூ.14,72,802ஐ வழங்க உத்தரவிட்டார். இந்த மூன்று வழக்குகளில் மொத்தமாக சேர்த்து ரூ. 40,62,227 இழப்பீட்டுத் தொகையை வழங்காத குளித்தலை அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்துகளான குளித்தலை - மணப்பாறை செல்லும் அரசு பேருந்து, குளித்தலை - நல்லூர் செல்லும் அரசு நகர பேருந்து, அதுபோல குளித்தலை - பழைய ஜெயங்கொண்டம் செல்லும் அரசு நகர பேருந்து ஆகிய 3 பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற அலுவலர்களுடன் சென்ற அமீனா தனலட்சுமி, குளித்தலை பேருந்து நிலையத்தில் 3 அரசுப் பேருந்துகளையும் இன்று ஜப்தி செய்தார். ஜப்தி செய்யப்பட்ட அரசுப் பேருந்துகள் நீதிமன்ற வாயில் முன்பு நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT