
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுக்கா மேல்பாலூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(40). இவர் கடந்த 2009-ம் ஆண்டு 12 வயதுடைய சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். இதற்கு முன்பும் பலமுறை ராஜ்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமாரின் நண்பர் கோபால்(39) என்பவர் சிறுமி கடைக்கு செல்லும் போது வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி நடந்த சம்பவ குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை வன்கொடுமை செய்த ராஜ்குமார் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த கோபால் இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்து வளாகத்தில் உள்ள மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வீணாதேவி ஆஜரானார்.
இந்த நிலையில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுஜாதா, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கோபாலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.