Court sentenced to life imprisonment to the woman

கள்ளக்குறிச்சி மாவட்டம், காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(40). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மாலதி என்பவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பிள்ளைகளும் உள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் ரவிச்சந்திரன், மனைவி மாலதி மீது சந்தேகம் கொண்டுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. கணவரின் சந்தேக தொல்லை தாங்க முடியாத மாலதி ஒரு கட்டத்தில் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி காலை தங்கள் வீட்டு மாடுகளிடம் பால் கறந்து கொண்டு அதே ஊரில் உள்ள பால் பண்ணையில் பாலை ஊற்றி விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் ரவிச்சந்திரன்.

Advertisment

அப்போது நடுவழியில் அவரை வழிமறித்த மாலதி, அவரது மகன் ராஜதுரை, மாலதியின் அண்ணன் சுப்பிரமணியன் ஆகிய 3 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் ரவிச்சந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரவிச்சந்திரனை அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பற்றி ரவிச்சந்திரன் சகோதரர் முருகன் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சின்னசேலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மாலதி உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில் கணவரை கொலை செய்த மாலதி, அவரது மகன் ராஜதுரை, மாலதியின் அண்ணன் சுப்பிரமணியம் ஆகிய மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனையும் மாலதி அவரது மகன் ராஜதுரை இருவருக்கும் தலா 11 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அபராதத் தொகை கட்ட தவறினால் மேலும் 8 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி.

இதையடுத்து குற்றவாளிகள் மாலதி வேலூர் மத்திய சிறையிலும், ராஜதுரை, சுப்பிரமணியன் ஆகிய இருவரையும் கடலூர் மத்திய சிறையிலும் அடைக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.