சேலத்தில் ஊழல் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை குவித்த ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரிக்கும், அவருடைய மனைவிக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், முறைகேடாக அவர்கள் குவித்துள்ள சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்யவும் சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் மோகன் (65). ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி. இவர், மேட்டூர் வனச்சரகத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வனச்சரக அலுவலராக பணியாற்றி வந்தார்.
அப்போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக அவர் மீது சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்கு புகார்கள் வந்தன. விசாரணையில், ஜாகீர் அம்மாபாளையத்தில் 1,045 சதுர அடி நிலம், மெய்யனூரில் 2,400 சதுர அடி நிலம், போடிநாயக்கன்பட்டியில் 3,600 சதுர அடி நிலம் ஆகியவற்றை வாங்கிக் குவித்திருப்பது தெரியவந்தது. இந்த சொத்துகளின் அப்போதைய மதிப்பு 26 லட்சம் ரூபாயாக இருந்தது. தற்போது இவற்றின் வெளிச்சந்தை மதிப்பு பல கோடி ரூபாய் பெறும் என்கிறார்கள்.
இதையடுத்து வனச்சரகர் மோகன், அவருடைய மனைவி சித்ராமணி (60) ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 14 ஆண்டுகளாக நடந்துவந்தது.
இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ஜெயந்தி, சனிக்கிழமை (நவ. 28) தீர்ப்பு அளித்தார். பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட வனச்சரகர் மோகனுக்கும், அவருடைய மனைவி சித்ராமணிக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துகள் அனைத்தையும் உடனடியாக பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிடுவது சேலம் மாவட்டத்தில் இதுவே முதன்முறையாகும். அதேபோல், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.