Advertisment

ஒன்றியம் என சொல்வதற்கு தடைவிதிக்க முடியாது - நீதிமன்றம் அதிரடி!

The Union cannot be barred from saying so- Court Action

தமிழ்நாடுஅரசின் அலுவல்ரீதியான அறிவிப்புகள், நிகழ்த்தப்படும் முறைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ஒன்றியம் என்ற வார்த்தைக்கு இடைக்காலத் தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி அமைத்திருக்கும் திமுக அரசு, இந்திய அரசை ஒன்றிய அரசு என்ற அழைத்துவருகிறது. திமுக கட்சியின்கீழ் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், அவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தச் செயல் இருக்கிறது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்படவில்லை எனில் இது தவறான முன்னுதாரணமாக அமைவதோடு, ஜம்மு காஷ்மீர் போன்ற பிரிவினைக்கு வாய்ப்பாக இருக்கும்” என கூறியிருந்தார். அதேபோல் “தமிழ்நாடு தலைமைச் செயலர் அலுவல் ரீதியாக நிகழ்த்தப்படும் முறைகள் போன்றவற்றில் ஒன்றியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் அறிவிப்பு முறைகள் போன்றவற்றில் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் அறிவுறுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

Advertisment

இந்த வழக்கு இன்று (01.07.2021) நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் 'இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இந்திய அல்லது பாரதம் என்று வார்த்தைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. அவ்வாறு இருக்கையில் அவை அல்லாத ஒன்றியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தவறானது’ என தெரிவிக்கப்பட்டது.அதற்கு நீதிபதிகள், 'தடுப்பூசி எடுத்துக்கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவ்வாறு இருக்கையில் இப்படித்தான் பேச வேண்டும் என எவ்வாறு உத்தரவிட முடியும்’ என்றனர். அதற்கு மனுதாரர் தரப்பில், சட்டமன்றத்தில் இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது முதலமைச்சர் ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை. அவ்வாறுதான் அழைக்கப்படும் என குறிப்பிட்டார். அதைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், ‘மனுதாரர் கோரும் வகையில் முதல்வரும் அமைச்சர்களும் இவ்வாறுதான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட இயலாது. மனுதாரர் தமிழ்நாட்டு மக்களுக்கு எதனை கற்றுக்கொடுக்க விரும்புகிறார் எனத் தெரியவில்லை. மனுதாரர் கூறும் வகையில் உத்தரவிட முடியாது’ என குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

stalin union madurai high court highcourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe