/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/AFSD.jpg)
ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீதான விசாரணையை, வரும் 14-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் ராஜேஷ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முதலில் தடை விதிக்க மறுத்து, நிபந்தனைக்கு உட்பட்டு விற்கலாம் எனதெரிவித்தது. ஆனால், நிபந்தனைகள் மீறப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை நுகர்வோர் அமைப்பு பொதுச்செயலாளர் சிங்கராஜூ என்பவர், ஏற்கனவே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனதொடர்ந்த வழக்கு, விசாரணை பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டாஸ்மாக் கடைகளை மூட அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ள போதிலும், ஆன்லைன் மூலம் விற்கவும் தடை விதிக்க வேண்டும் என்று முறையிட்டார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால், அந்த முடிவைபொறுத்தே, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறி விசாரணையை 14- ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Follow Us