/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a4050.jpg)
கடந்த 2006-2011 ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததாகவும், இதனால் 25 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.
அதில் கிடைத்த பெருந்தொகையை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ததாக சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் கௌதம சிகாமணி, அசோக் சிகாமணி ஆகியோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இன்று நீதிபதி ஓம்பிரகாஷ் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன்கள் நேரில் ஆஜராகினர். அமலாக்கத்துறை தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் பொன்முடி தரப்பிடம் வழங்கப்பட்டது.இந்த வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த பொழுது பொன்முடி தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில் வயதுமூப்பு காரணமாக தன்னால் ஆஜராக முடியவில்லை. அமைச்சர் பதவி ராஜினாமா செய்துவிட்ட போதிலும் தான் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதாகவும் தேர்தல் தொடர்பான பணிகள் வழங்கப்பட்டிருக்கிறது. என்னுடைய வயதையும் கருத்தில் கொண்டு இந்த வழக்கில் தான் ஆஜராவதற்கு விலக்களிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
'பொன்முடி செயற்குழு உறுப்பினராக இல்லை. எனவே விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கூடாது' என அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதி பொன்முடி தரப்பில் செய்யப்பட்ட மனு மீதான உத்தரவை ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)