
ஆகம விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கவும், தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது எனவும் உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சென்னை சிஐடி நகரைச் சேர்ந்த எஸ். ஸ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டும்தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என ஆகம விதிகள் வகுக்கப்பட்டிருப்பதாகவும், அதை மீறி அர்ச்சகர் பயிற்சியை முடித்துவிட்டால் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்போம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கடந்த மாதம் அளித்த பேட்டியில், ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என அறிவித்திருப்பது ஆகம விதிகளுக்கு முரணானது என மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், குறிப்பிட்ட சமூகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாக இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழில் அர்ச்சனை செய்வதும், குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர மற்றவர்கள் கருவறைக்குள் செல்வதும் ஆகம விதிகளுக்கு முரணானது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ள நிலையில், 500 கோவில்கள் மட்டுமே ஆகம விதிகளைப் பின்பற்றுவதாகவும், அங்குள்ள நியமனங்களில் ஆகம விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த 500 கோயில்கள் தவிர 43,500 கோவில்களில் தமிழக அரசின் திட்டப்படி அனைவரையும் அர்ச்சகராக நியமித்துக்கொள்ளலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளார். எனவே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க கூடாது எனவும், ஆகம விதிகளைப் பின்பற்றி குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் பி. முத்துக்குமார் ஆஜராகி,சிவாச்சாரியார்கள் வழக்கில் ஆகம விதிகள் படித்தவர்கள் அர்ச்சகர் ஆகலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், அதற்கு முரணாக வழக்கு தொடரப்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு, ஆரம்ப காலகட்டத்திலேயே ஸ்ரீதரனின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை ஆய்வுசெய்துவிட்டுவாதங்களை முன்வைக்கும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)